இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொஹான் குணரட்ண, கனடியத் தமிழர் பேரவை தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்காக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராரியோ மாநிலத்தில் இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொஹான் குணரட்ண லக்பிமவுக்கு அளித்த பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ் செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ரொஹான் குணரட்ணாவின் இக் கூற்று உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொய்களால் சோடிக்கப்பட்டவை என்றும், இவ் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடியத் தமிழர் பேரவை ஆனது, தமிழ்க் கனேடியர்களின் குரலாக ரொரன்ரோ மாநகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு கனடா முழுவதும் பல் கிளைகளை நிறுவி, கனடாவில் உள்ள மத்திய, மாகாண, மாநகரசபை அரசாங்கங்களுடனும், அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளைப் பேணி இயங்கி வரும் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும். கனடியத் தமிழர் பேரவை அதன் அங்கத்துவர்களால் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கல்விமான்கள், தொழில் விற்பன்னர்ளை உள்ளடக்கிய ஒரு பணிப்பாளர் குழுவினரால் வழிநடத்தப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரொஹான் குணரட்ணவுக்கு எதிரான இம் மானநஸ்ட வழக்கில் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் சுந்தமூர்த்தி, கனேடியத் தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வாதிகளாகவும், ரொஹான் குணரட்ண, அக் கூற்றைப் பிரசுரித்த லக்பிம பத்திரிகை நிறுவனர் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் ஆவணப் பிரதிகள், சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்டத்தரணி குழுவினரால், ரொஹான் குணரட்ணவுக்கு சேர்க்கப்பட்டுள்ளன என்பதும், இன்று வரை தனக்கெதிரான வழக்கினை எதிர்த்து அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக