5 ஜூலை, 2011

சண்டே லீடரில் செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன்: கரு



ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் எதிரணியின் பொதுவேட்பாளரின் பிரசார பணியில் நாம் கூடுதல் கவனம்செலுத்தியிருந்தோம். அவ்வாறான நிலையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான சண்டே லீடர் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை பார்த்ததும் நான் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய சாட்சியமளித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற மேற்படி வழக்கில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வழக்கில் நேற்றயைதினம் சாட்சியமளிப்பதற்காக பேராசிரியர் எஸ்லி அல்பே, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மற்றும் சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரஷ்மி விஜயவர்தன ஆகியோர் மன்றில் பிரசன்னமாய் இருந்தார்.

வழக்கு விசாரணை நேற்று முற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி கருஜயசூரியவின் சாட்சியத்தை முதலாவதாக நெறிப்படுத்தவிருப்பதாக தெரிவித்ததை அடுத்து ஏனைய இரண்டு சாட்சிகளும் மன்றிலிருந்து வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டனர்.

இதனிடையே குறுக்கிட்ட சட்டத்தரணி பிரதிவாதியின் தரப்பில் ஆஜராகியிருக்கின்ற மன்றுமொரு சாட்சியான பேராசிரியர் எஸ்லி அல்பேயை மன்றிலிருந்து வெளியேற்றவேண்டிய தேவையில்லை என்று நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறுக்கிட்ட பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியாளர் நீதிமன்றத்திற்குள் இருப்பதனை நான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் முதலில் தெரிவித்தபோதிலும் பின்னர் அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்தே ஐக்கியதேசியக்கட்சியின் எம்.பியான கரு ஜயசூரியவின் சாட்சியத்தை பிரதிவாதியின் சட்டத்தரணி நெறிப்படுத்தினார்.

கேள்வி: தற்போது பாராளுமன்ற உறுப்பினர்?
பதில்: ஆம்.

கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவராகவும் பதவிவகிக்கின்றீர்கள்?
பதில்:ஆம்.

கேள்வி:சிற்சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள்?
பதில்: ஆம்.

கேள்வி: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்காக தேர்தல் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்கள்?
பதில்:ஆம்.

கேள்வி: என்ன தேர்தல்?
பதில்: ஜனாதிபதி தேர்தல்.

கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சி எந்தவேட்பாளரை ஆதரித்தது?
பதில்: ஐக்கியதேசியக்கட்சி சரத்பொன்சேகாவை ஆதரித்தது.

கேள்வி:வேறுகட்சிகள் ஆதரித்தனவா?
பதில்: பிரதானமாக ஐக்கியதேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளித்தன.ஏனைய சிறு சிறு கட்சிகளும் ஆதரவளித்தன.

கேள்வி: ஐக்கிய தேசியகட்சியின் தொடர்பாளராக இருந்தீர்கள்?
பதில்: முழுமையான ஒத்துழைப்பு நல்கினேன் காரியாலயமும் திறக்கப்பட்டது.

கேள்வி:ஜனாதிபதி தேர்தல் ஞாபகமா?
பதில்: ஜனவரி மாதத்தில்.

கேள்வி: தேர்தல் நடவடிக்கையை எப்போது ஆரம்பித்தீர்கள்?
பதில்: வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து.

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியான திகதி ஞாபகமா?

பதில்: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி.

கேள்வி: ஏதாவது நடவடிக்கையை மேற்கொண்டீர்களா?
பதில்: சண்டே லீடரில் அந்த செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன். சரத்பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு விளங்கப்படுத்துமாறு கோரினேன்.

கேள்வி:சரத்பொன்சேகா தெளிவுப்படுத்தினாரா?

பதில்: நான் கூறியதைபோல அந்த செய்தியில் இருக்கவில்லை . அது ஊடகவியலாளரின் கதையே தவிர என்னுடைய கதையல்லை என்றார். கரு ஜயசூரிய அவ்வாறு சாட்சியமளித்து கொண்டிருந்தவேளையில் நீதிமன்றத்தில் மின்சாரம் தடைப்பட்டது. விரைந்து செயற்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் மன்றின் கதவுகளை திறந்தபோதிலும் மின்சாரம் தடைப்படுவதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்திய நீதிபதிகள் முற்பகல் 11.20 மணியளவில் மேற்படி வழக்கு விசாரணையை இன்று வரைக்கும் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக