11 ஜூலை, 2011

நீதி, சுதந்திரமான தேர்தல் வடக்கில் இடம்பெறுவதற்கான சூழல் இல்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

வட பகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குமுறை தலைதூக்கி சிவில் நிர்வாகம் அற்றுப் போயுள்ளது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். நாட்டில் "அரசாங்கம்'' என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, செயலில் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் நாய் கழுத்து வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. அத்தோடு வேட்பாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எமது ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் பிரசாரங்களை நடத்தியபோது சிறு இராணுவக் குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமாக பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

வட பகுதிக்கு அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற அரச தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள தாய்மாரை அழைத்து அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.

ஆனால் இப்பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் கண்ணீர் மல்க கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏமாந்து போன படப்பிடிப்புக் குழுவினர் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளனர்.

வடக்கில் இன்று சிவில் நிர்வாகம் இல்லை. அரசாங்கத்தின் அடக்கு முறையே தலைதூக்கியுள்ளது. நாட்டில் இன்று அரசாங்கம் என்பது பெயரளவிலேயே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க முடியாமல் உள்ளது.

யுத்தம் முடியட்டும் சம்பள உயர்வை வழங்குகிறோம். வாழ்க்கைச் செலவை குறைப்போம். வரிகளை குறைப்போம், மக்கள் மீது சுமைகளை சுமத்தமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது.

இன்று யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. ஸ்திரமான அரசாங்கம் தேவை என்றார்கள். அதனையும் பெற்றுக் கொண்டனர்.

சிறப்புரிமைகள் சலுகைகளை வழங்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் மக்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக சுமைகளையே அதிகரித்துள்ளனர். நுரைச்சோலை, கொத்மலை அனல் மின் நிலையங்கள் பல இலட்சம் ரூபா செலவில் கோலாகலமான வைபவங்களை நடத்தி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்காமலேயே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு 2000 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது.

ஊழியர்களின் சம்பள நிலுவை 900 மில்லியன் ரூபா செலுத்தப்படாதுள்ளது. பல கோணங்களில் மின்சார சபை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனல் மின்நிலையங்கள் இயங்காமையின் பின்னணியில் "சதிகாரரர்கள்'' இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு ""சதித் திட்டம்'' என்ற வார்த்தை தாரக மந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் இந்நாள் சுகாதார அமைச்சரும் டெங்கை முற்றாக ஒழிப்போம் பி.ரி.ஐ. பக்டீரியாவை பயன்படுத்துவோம் என்றெல்லாம் உறுதி மொழிகளை வழங்கினர்.

ஆனால் டெங்கு நோயாளர்களின் தொகை 11,110 ஆக அதிகரித்துள்ளது. 82 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வாரத்திலும் 900 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு முழு நாடுமே சீர்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது.

ஆனால் அரசாங்கத்திடம் எதுவிதமான திட்டங்களும் இல்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு பின்னரும் விலையேற்றங்கள் இடம்பெறும்.

எதுவிதமான நிர்வாகத் திறனும் இல்லாத மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும் இந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் தோல்வியøடயச் செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக