1 ஜூலை, 2011

வடக்கில் சுதந்திரமான தேர்தலுக்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டும்: ஐ.தே.க




வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை அரசாங்கம் அங்கு ஏற்படுத்தவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :

வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் அதிகமான உள்ளூராட்சிமன்றங்களுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வடக்கில் தேர்தல் சுதந்திரமதாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது அந்த சந்தேகத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுடன் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை உருவாக்கவேண்டும். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி சிறந்த முறையில் தயாராகி வருகின்றது. இவ்விடயம் குறித்து ஆராய எமது கட்சியின் சார்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவானது வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளையும் பிரசார பணிகளையம் ஒருங்கிணைக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக