1 ஜூலை, 2011

புதுநகர் மக்கள் வங்கியில் 37 இலட்சம் ரூபா பணமும் நகைகளும் கொள்ளை




மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலைத்தீவு புதுநகர் பிரதேச மக்கள் வங்கிக்கிளைக்குள் உட்பிரவேசித்த ஆயுததாரிகள் 37 இலட்சம் ரூபா பணத்தையும் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த துணிகரச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம் பெற் றுள்ளது. வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கிக்குள் திடீரென இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் வங்கியில் கடமையிலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அறையொன்றினுள் பூட்டி வைத்து விட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியினை பறித்து உடைத்துவிட்டே இந்தக் கொள்ளையில் ஆயுததாரிகள் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் முகாமையாளர் நேற்றைய தினம் வங்கிக்கு சமூகமளித்திருக்காத நிலையில் ஏனைய மூன்று பெண் ஊழியர்கள் மாத்திரமே வங்கியில் கடமையிலிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆயுததாரிகள் வந்த வேனில் வங்கியொன்றின் முத்திரை பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஐந்து பேர் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புதுநகர், மக்கள் வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே கடந்துள்ளது. படுவான்கரை பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக