2 ஜூலை, 2011

தெரிவுக் குழு அமைத்து நாட்டு மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது: கரு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வு வழங்கினாலும் அதற்கு ஐக் கிய தேசியக் கட்சி முழு அளவில் ஆதரவு வழங்கும். ஆனால் தெரிவுக் குழுக்களை அமைத்து நாட்டு மக்களையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்ற முயற்சிப்பதை எம் மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ. தே. க. வின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி குழுவின் தீர்வு திட்ட யோசனை உள்ளது. மேலும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. எனவே இனியும் தெரிவுக் குழு அமைப்பது என்பது போலி நாடகமாகவே அமைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வில் ஐ. தே.க. முழு அளவில் ஆதரவு வழங்கி செயற்படும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள காலம் கடத்தாது தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுக்கள் போதாதென்று இன்னுமொரு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது என்பது இழுத்தடிப்பு வேலையாகும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தீர்வு தேட வேண்டிய அவசியம் கிடையாது.

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் முன் வைக்க விரும்பும் தீர்வுத் திட்டத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும். அத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதால் அதற்கு தேவையான திருத்தங்களை ஏனைய அரசியல் கட்சிகளுடன் விவாதித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதை விட்டு விட்டு வெறும் பேச்சு வார்த்தைகளினால் காலத்தை கடத்துவதில் பயனில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக