13 ஜூலை, 2011

நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுண்டு : குணவன்ச

இன்றைய அரசாங்கத்தை நாங்களே உருவாக்கினோம் எனவே 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது நல்லது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லே குணவன்ச தேரர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தேரர் மேலும் உரையாற்றுகையில்; இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் 13 ஆவது திருத்தத்தை கோரவில்லை. இந்தியாவே பலாத்காரமாக எம் மீது இதனை சுமத்தியது. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பிரச்சினை என்ன என்பதை தெரிவிக்கப்படவில்லை.

லியம் பொக்ஸ், யசூசி அகாசியென வெளிநாட்டவர்கள் அடிக்கடி இலங்கைக்கு படையெடுக்கினற்னர்.

இதன் பின்ணியில் சதித்திட்டமொன்று உள்ளது. இன்று சில அமைச்சர்கள் நோர்வேயினை மீண்டும் பிரச்சினைக்கு தீர்வு மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இவ்வாறாக நோர்வேயிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற பட்டியல் எம்மிடம் உள்ளது.

இவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படையினருக்கு ஒரு தோடம் பழத்தையேனும் வழங்கியதில்லை. ஆனால் அடிக்கடி நோர்வேக்கு பயணத்தை மேற்கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவார்கள்.

மாகாண சபைகளால் என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. சைக்கிள் கூட இல்லாதவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாகி ப்ராடோ சொகுசு வாகனத்தில் பவனி வரும் நிலைமையே உருவானது. இதற்கு வீணாக நாட்டின் பணம் செலவு செய்யப்படுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக