31 ஜனவரி, 2011

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நகைச்சுவையானது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை நகைச்சுவையான செயற்பாடாகும். இது குறித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் ஒரு நகைச்சுவையாளர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள வழக்கானது மிகப்பெரிய நகைச்சுவையாகும். எனவே அவ்வாறான நகைச்சுவை ஒன்று தொடர்பில் நாங்கள் குழப்பமடைய தேவையுமில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமது உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளமைக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்கள் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் முப்பது மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும், கோரப்பட்டுள்ளது.

கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில் : அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் ஒரு நகைச்சுவையாளர். அதனை அவ்வாறு குறிப்பிடலாம். எனவே அவரின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவோ குழப்பமடையவோ வேண்டிய அவசியம் இல்லை.

இதே வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு ஆக்கத்தை எழுதினார். அந்த கட்டுரையில் வடக்கு கிழக்கில் தனிநாடு அமையவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். அந்தளவுக்கு புலிகளுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டுவருகின்றார்.

அந்த வகையில் இவர் நீண்டகாலமாக புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்தவர். இந்த வழக்கறிஞர் புலிகளுக்கு சார்பானவர் என்றும் ஒத்துழைப்பு வழங்குபவர் என்றும் சர்வதேச மட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.

எனவே இவ்வாறான புலிகளின் ஆதரவு செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவோ குழப்பமடையவோ வேண்டிய தேவை இல்லை.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு பதிலளித்து எமது காலத்தை வீணடிக்கவேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

இதேவேளை இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கையும் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக