29 ஜனவரி, 2011

சிவாஜிலிங்கத்தை த.தே.கூ சேர்ப்பதற்கான பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை:த.தே.கூ




வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவே தவிர அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி எடுத்த முடிவு அல்ல என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல். எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச் செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதன் முழு விபரத்தை இங்கு தருகிறோம்.

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் பொருளாளர் திரு.குலநாயகம் அவர்களுக்கும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டும், ஒப்பந்தமும் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கூட்டாகவே, தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு.மாவை சேனாதிராசா அவர்களால் கூறப்படுகின்றது.

திரு.சிவாஜிலிங்கம் அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சு வார்த்தைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓரிரு அமைப்புகள் உள்வாங்கப்பட்டதற்கு பெரும்பான்மையான த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்த பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் கேட்டதற்கிணங்க அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுப் பின்னர் அதனைப் பற்றி முடிவெடுப்பதாயிருந்தது.

ஆனால், அந்த முடிவுக்கு முரணாக, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக திரு.மாவை சேனாதிராசா அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்.

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கிளிநொச்சியிலும், வன்னியின் ஏனைய மாவட்டங்களிலும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னா அவர்களின் தலைமையிலான கட்சியில் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழத்; தேசிய கூட்டமைப்புக்கும் ஓர் பாடம் படிப்பிக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையின் நகர சபைக்கு திரு.குலநாயகம் அவர்கள் 2 வருடமும் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் 2 வருடம் தலைவராக இருப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியில் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும், திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தானே முதன்மை வேட்பாளர் என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் எந்த ஓர் பட்டியலிலும் யாரும் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், திரு.சிவாஜலிங்கம் அவர்கள் தன்னைத்தானே முதன்மை வேட்பாளராக அறிவித்தது தவறானது என்பதையும், யார் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே பிரதேச, நகர சபைகளின் முதல்வர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும்; தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக்கட்சி சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியிருக்கின்றது. இதனைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்து பேசாமல் முடிவுகள் எடுப்பது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வறிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் களைந்து, அதனை வலுவான ஒரு கட்சியாக மாற்றுவதற்கான ஓரு முயற்சியும் ஆகும். இதனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தமிழ் மக்களை ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக