31 ஜனவரி, 2011

ஐ.தே.க. வேட்பாளர் மீது பேருவளையில் தாக்குதல்


பேருவளை நகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஹசன் பாயிஸ் தாக்குதலுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஒருவருடைய உறவுக்காரரும் பேருவளை நகர சபை முன்னாள் மேயர் மர்ஜான் பளீல் என்பவரே தன்னை தாக்கியதாக ஹசன் பாயிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேருவளையில் இருந்த போது வாகனத்தில் வந்த முன்னாள் மேயர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளார். எனினும் அவருடன் வந்த மற்றவர்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்ட நபருடைய மகன் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் தாக்குதலுக்குள்ளான குறித்த நபரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறப்பட்டதாம். அதனை மீறி செயற்பட்டதாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கியவர்கள் கூறிவிட்டுச் சென்றதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்த பேருவளை நகர சபையின் முன்னாள் மேயர் மர்ஜான் பளீல் எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பின் அதற்கு முகம் கொடுப்பதற்கு நான் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக