29 ஜனவரி, 2011

எதிராக நீதிமன்றம் செல்கிறது ஈ.பி.டி.பி


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஈ.டி.பி.பி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈ.பி.டி.பி.யின் முக்கிய பிரமுகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டிருந்தவருமான சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் தகவல் வெளியிடுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறிய தவறு காரணமாகவே எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின பெயர் ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டிருந்த போதும் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ளதாகக் காரணம் காட்டியே யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அந்த வேட்புமனுவை ஏற்க மறுத்துள்ளார்.
தேர்தல் சட்டத்தின் படி இதுபோன்ற காரணங்களைக் காட்டி உதவித் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது. விரைவில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இதுபோன்ற சிறிய தவறுகள் காணப்பட்டன.
ஆனால் அந்த மனுக்கள் இன்னமும் நிராகரிக்கப்படவில்லை. நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால் எமது எதிர்ப்பை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்து விட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்புமனுவில் ‘ஐக்கிய‘ என்ற சொல் விடுபட்டிருந்தது.
அதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். அதுபோலவே நாமும் சிறியதொரு தவறைத் தான் செய்துள்ளோம். அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை. எமது வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவும் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


யாழில் ஈபிடிபின் வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்தது கூட்டமைப்பு!
யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் யாழ்ப்பாணத்தில் 13 பிரதேசசபைகள் 3 நகரசபைக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 16 வேட்புப் பத்திரங்களின்படி 63 வேட்புப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 20 நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு உள்ளிட்ட 20 வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்கான 19வேட்புமனுத் தாக்கல்கள் உதவித் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 3 நகரசபை, மற்றும் 13 பிரதேச சபைகளுக்கும், கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தேர்தல்த் திணைக்களத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட போதும் வேட்புமனுவில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என விண்ணப்பிக்கப்பட்டமையினால் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் சுட்டிக்காட்டியதையடுத்து யாழ் மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் வேட்புமனுக்களை நிராகரித்தார்.
இதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் யாழ்மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபையிலும் ஐ.தே.க. யானை சின்னத்தில் 16 சபைகளிலும் போட்டியிடுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பருத்தித்துறை நகரசபை, காரைநகர் பிரதேசசபை, வலிகிழக்கு பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை உள்ளிட்ட 4 சபைகளில் மணிச்சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
ஐக்கிய சோசலிச கட்சி சாவகச்சேரி நகரசபையில் ஓட்டோ சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தவிர 6 சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக