29 ஜனவரி, 2011

பதுளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் போட்டி


பதுளை மாவட்டத்தின் இரு நகர சபைகளினதும் 15 பிரதேச சபைகளினதும் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் தமிழ் வாக்காளர்களையும் 38 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களையும் மையப்படுத்தியே, மேற்கண்ட வேட் பாளர்கள், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளிலேயே, அதிகளவு தமிழ் வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிட மக்கள் விடுதலை முன்னணியும் கூடுதலான தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் கணி சமான தமிழ் வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பசறை, வெலிமடை, பண்டாரவளை பிரதேச சபைகளுக்கு கூடுதலான முஸ்லிம்களை களம் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக் கட்சியும் கணிசமான முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறத்தியிருக்கின்றது. லுனுகலையில் முஸ்லிம்களைக் கொண்ட சுயேச்சைக் குழுவொன்றும், லுனகலை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றது.

இரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது, பதுளை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அத்தோடு 36 சுயேச்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிடவே கூடுதலான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. லுனுகலை பிரதேச சபை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபையென்பதும், குறிப்பிடத்தக்கது.

நடைபெறப் போகும் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பசறை, லுனுகலை, அப்புத்தளை, ஹாலி- எலை, ஊவாபரணகம, அல்துமுள்ளை, எல்ல அகிய பிரதேசங்களிலேயே தமிழ் வாக்காளர்கள் ஆகக் கூடுதலாக இருந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக