29 ஜனவரி, 2011

2047 வேட்புமனுக்களில் 1597 ஏற்பு மன்னாரை தவிர 300 சபைகளில் 450 நிராகரிப்பு


மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதுமாக 1597 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 1282 வேட்பு மனுக்களில் 1134 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 765 வேட்பு மனுக்களில் 463 ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல்கள் தலைமையகம் தெரிவித்தது.

அரசியல் கட்சிகளின் 148 மனுக்களும் சுயேச்சைக் குழுக்களின் 302 வேட்பு மனுக்களுமாக 450 வேட்பு மனுக்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 301 உள்ளூ ராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டதுடன் அவற்றுள் 300 சபைகளி லும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மன்னாரில் மாத்திரம் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், கூடுதலானவை நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இங்கு 92 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததுடன் அரசியல் கட்சிகள் 72 மனுக்களையும் தாக்கல் செய்தன. சுயேச்சைக் குழுக்களின் 43 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சிகளின் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆகக் குறைந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகள் மாத்திரம் 15 மனுக்களைத் தாக்கல் செய்ததுடன் ஏழு நிராகரிக்கப்பட்டன.

எம்பிலிபிட்டி நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் யாழ்ப்பாணத்தில் 13 மனுக்களும் கிளிநொச்சியில் மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தவிரவும், நுவரெலியா, யட்டிநுவர, மொனறாகலை, சியம்பலாண்டுவ, ஹக்மீமன, பள்ளேவில, வில்கம, பொல்கஹவெல ஆகிய பிரதேச சபைகளினதும் லிந்துலை - தலவாக்கலை நகர சபைகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுக்களில் ஹோமாகம, வெலிகேபொல, வெலிக்கந்தை, பத்தேகம, ஹெலஹர பிரதேச சபைகளினதும் வரகாபொல நகர சபையினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மினுவாங்கொடை, உக்குவளை, மாவத்தகம, அத்தனகல்ல ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

சிறு சிறு தவறுகள் காரணமாகவே தமது கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால், நீதிமன்றத்தை அணுகி தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐ.ம.சு.மு.வின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கும் போது ஏற்பட்டுள்ள சொல் வித்தியாசமாகும். எனவே, அது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

சிறு சிறு தவறுகளால் இந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையால், அடுத்த வாரம் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக