29 ஜனவரி, 2011

வடக்கில் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர்: ஜே.வி.பி.


யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் வடபகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஜே.வி.பி., பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். வடபகுதி மக்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் வாழவில்லை எனவும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில், சுதந்திரமான வாழ்க்கையே 30 வருடகால யுத்தத்திற்கு பின்னரான வடபகுதி மக்களின் முதலாவது எதிர்பார்ப்பாக இருந்தது. தமது பொருளாதார பிரச்சினை மற்றும் ஏனைய சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதனைப் போன்று சுதந்திரமாக நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய நிலைமையை உருவாக்குவதே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் இன்னமும் சிவில் நிர்வாகத்தின் கீழ் வடபகுதி மக்கள் வாழவில்லை. பெரும் அச்சத்துடனேயே வடக்கிலுள்ள பெரும் பாலான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போதும் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகளில் குறிப்பாக ஜே.வி.பி.யில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையின்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த சவால்களுக்கு மத்தியிலேயே வடபகுதியில் நாம் இந்த தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வகையில் வடபகுதி மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமும் வடக்கு, தெற்கு, கிழக்கு என்ற பேதமின்றி தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்ற செய்தியை வடக்கு, கிழக்கு மக்களுக்கு சொல்ல தயாராகவுள்ளோம். அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் ஆயத்தமாகவுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக