27 ஜனவரி, 2011

முல்லைத்தீவில் அரசாங்கம் போட்டியிடாமை கூட்டமைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி: சிவசக்தி ஆனந்தன்




முல்லைத்தீவில் அரசாங்கம் தனது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் ஒளிந்துகொண்டு போட்டியிடுவதே எமக்குக் கிடைத்த முதல் வெற்றியென்றும் இதன் மூலம் வடக்கு-கிழக்கில் அனைத்து இடங்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது என்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நேற்று வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெருங்கல் செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தபின்னர் வேட்பாளர்களின் மத்தியில் உரையாற்றிய போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து அதற்கான அங்கீகாரத்தைக் கேட்டிருந்தோம். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு எமக்கு வாக்களித்தனர். அதனைப்போன்று இத்தேர்தலிலும் நாம் எமக்கு என்ன தேவை என்பதையும் எமது அரசியல் தீர்வு தொடர்பான யோசனைகளையும் முன்வைத்து மக்களிடம் கேட்கப்போகின்றோம். அதற்கும் எமது மக்கள் தமது பூரண ஆதரவினைத் தருவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் இழந்தவைகளுக்கு ஈடாக எமக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இத்தேர்தல் எமக்கு ஒரு கருவியாகப் பயன்படவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் கட்சிகளை மறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு உழைத்து எமது இலட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாகக் கடமையாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக