29 ஜனவரி, 2011

இலங்கை துறைமுகங்களுக்கு 500 கப்பல்களை வரவழைக்கும் திட்டம் கப்பல்களை திருத்துவதற்கும் விசேட பிரிவுகள்



ஆசியாவின் கொள்கலன் கப்பல் போக்குவரத்து சேவையின் கேந்திர ஸ்தானமாக விளங்கி வரும் இலங்கையின் கப்பல் சேவைகளை வலுவூட்டும் எண்ணத்துடன் அரசாங்கம் மனித வளங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டு வருகிறது.

வணிக சட்டம் மற்றும் நடை முறையை அபிவிருத்தி செய்வதற்கான ஸ்தாபனம் (ஐஇகட) இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து கப்பல் போக்குவரத்து சட்டம் மற்றும் அதன் நடைமுறை பற்றிய பயிற்சி பாசறையை கடந்த 23 ஆம் திகதியன்று கொழும்பில் ஆரம்பித்து வைத்தது.

தெற்காசிய பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து துறையில் முன்னணி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இத்தகைய பயிற்சிகள் பேருதவியாக அமையும். திருகோணமலை, ஒலுவில், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு வளர்ச்சி அடைய செய்வதன் மூலம் மாதமொன்றுக்கு இலங்கை துறைமுகங்களில் தரித்து செல்லும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உலகிலுள்ள மிகப் பெரிய துறைமுகங்களான, ஜெர்மனியின் ஹெம்பர்க் துறைமுகம், ஹொங் கொங் துறைமுகம், சிங்கப்பூர் துறைமுகங்களை போன்று நவீன வசதிகளைக் கொண்ட பாரிய துறைமுகங்கள் போன்று கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் இப்பொழுது நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இவ் விரு துறைமுகங்களில் பழுதடைந்த கப்பல்களை திருத்துவதற்காக விசேட பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக