29 ஜனவரி, 2011

சென்னை மகாபோதி தாக்குதலுக்கு சர்வ மதத் தலைவர்கள் கண்டனம் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு நன்றி; பாராட்டு






சென்னை மகாபோதி விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலை பெளத்த, ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலை கட்டுப்படுத்தவும் மத ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து அவர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மகாபோதி விகாரை மீதான தாக்குதலை கண்டித்து தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளரும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் தலைவருமான வணபிதா சரத் ஹெட்டியாரச்சி கூறியதாவது:-

இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறு குழுவொன்றே இதனை செய்துள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாத குழுக்கள் எதுவும் இல்லை. இந்தியாவுக்கு யாத்திரை செல்வதற்கு இலங்கை மக்கள் அஞ்சத் தேவையில்லை.

இந்திய அரசு உரிய பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்துள்ளது. மகாபோதி விகாரைக்கருகில் காவலரண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தம் முடிவடைந்து நாடு அமைதியாகவுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும். இவ்வாறான சதிகளை ஒழிக்க இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தம்மாஷ்மி மத்திய நிலையத் தலைவர் கலகம தர்ம ரஷ்மி தேரர் கூறியதாவது:-

இந்தத் தாக்குதலை இன, மத, பேதமின்றி கண்டிக்கிறோம். இதனால், இரு நாட்டுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச ஹிந்து மத அமைப்பின் செயலாளரும் ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கூறியதாவது:-

இந்தத் தாக்குதலினால் பெளத்த மக்களின் மட்டுமன்றி முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களின் மனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் யாரும் கிடையாது. இனி மேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தெவட்டகஹ ஜுஆ பள்ளி பிரதம பேஷ் இமாமும், தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ஸெய்யித் ஹஷன் மெளலானா கூறியதாவது:-

30 வருட யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை நாட்டில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மகா போதி மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனை கண்டிக்கிறோம்.

இதன் பின்னணியில் தீவிரவாதிகள் கிடையாது. இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை கண்டிக்கிறோம். இன உறவை குழப்ப எடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.

மேலும் பலரும் கருத்துக் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக