26 ஜனவரி, 2011

அநுராதபுரம் சிறைக்கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது கைதி, அதிகாரி மோதல் குறித்து விசாரணை நடத்த மூவர் குழு நியமனம்

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய உண்ணாவிரத போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் நேற்று அநுராதபுரத்திற்கு சென்று கைதிகளுடனும் அங்குள்ள அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்தே இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அங்கு சுமுகநிலை நிலவுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அநுராதபுர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ரவீந்திரன் தலைமையில் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றும் அமைச்சரினால் நியமிக் கப்பட்டுள்ளதாக சதீஷ்குமுண்ர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் நடத்திய உண்ணாவிரதம் மற்றும் மோதல் தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார், சிறைச் சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் அநுராத புரத்திற்கு நேற்று நேரில் சென்று நிலை மைகளை ஆராய்ந்தனர்.

கைதிகளுடனும், அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய உயர் மட்டக் குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.

உணவு மற்றும் சுகாதார வசதிகள் உட்பட தங்களுக்கு தேவையான வற்றை செய்து தருமாறு கைதிகள் அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அமைச்சின் ஆலோசகர் தெரிவித்தார்.

மோதல் சம்பவம் தொடர்பான விசா ரணைகளை உரிய முறையில் நடத்தி ஒருவார காலத்திற்குள் தமக்கு அறக்கையாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விசாரணைக்காக நியமித்துள்ள குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் மாலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் எட்டுப் பேர் அடங்குகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும் கொலை தொடர்பாகவும் விரிவான விசாரணை களை நடத்தவென பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவின் ஆலோ சனையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலேயே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக