28 ஜனவரி, 2011

யாழ்., கிளிநொச்சி மாவட்டம் பிரதான கட்சிகளின் கூடுதல் மனுக்கள் நிராகரிப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியி டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தன. பத்தொன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதும் இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஜே. பி. வி. நான்கு உள்ளூராட்சி சபைக ளுக்கு வேட்புமனுவை முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலை மையில் தாக்கல் செய்தது.நவசமசமாஜக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்த வேட்புமனு ஆரம்பநிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவும் எம். சுமந்திரனும் தாக்கல் செய்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சமர்ப்பித்திருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சமர்ப்பித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 16 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன, கட்சியின் பெயரில் “முன்னணி" என்பதற்கு பதிலாக “கூட்டமைப்பு" என எழுதப்பட்டிருந்தமையால் இங்கு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஐ. தே. க. ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.



இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 உள்ளூராட்சி சபைகளுக்காக 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐ.ம.சு. முன்னணியின் 3 வேட்பு மனுக்களும் ஐ.தே.க.வின் ஒரு வேட்பு மனுவும் தமிழரசுக் கட்சியின் இரு வேட்பு மனுக்களும் நவசம சமாஜக் கட்சியின் ஒரு வேட்பு மனுவுமாக 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இங்கு முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., தமிழரசுக் கட்சி, நவசமசமாஜ கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன போட்டியிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக