27 பிப்ரவரி, 2010



ஈபிடிபியின் குழப்பம்
யாழ்பாணத்தில் வெற்றிலை, வன்னியில் வீணை என ஈபிடிபி போட்டி



(சாகரன்)
மிக நீண்ட இழுபறியின் பின்பு ஈபிடிபி வன்னியில் தமது சின்னமான வீணையிலும், யாழ்பாணத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. இச்செய்தியை அவர்களின் இணையத்தளம் உறுதி செய்துள்ளது. இரு மாவட்டங்களிலும் வேறு வேறு சின்னத்தில் போட்டியிட அரசு எப்படி அனுமதித்தது என்று ஆச்சரியமாக இருக்கின்றது. ஈபிடிபி யின் அரசியல் பீடம் இது பற்றி உறுதியான முடிவுகளை ஏன் மேற்கொள்ள முடியவில்லை என்பதுவும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த ஈபிடிபி தற்போது யாழ்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக பார்க்க முடிகின்றது. வன்னியில் தமது ‘சுதந்திரத்தை’ நிலைநாட்டியுள்ளது.
ஈபிடிபியும் வடக்குக்கு அப்பால் பார்க்காது கிழக்கு மாகாணத்தை இம்முறையும் கைவிட்டு விட்டனர். புலிகளிடம் இருந்து கருணாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இலங்கை அரசின் வசம் கிழக்கு வீழ்ந்தது. இதன் பின்பு புலிகளின் தனிநாட்டு ‘வரைபடம்’ தில் கிழக்கு இல்லாமல் போனது. இதே போல் இன்று டக்ளஸ் இன் ‘மாநிலதில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ யிலும் கிழக்கு விடுபட்டு பலகாலம் ஆகிவிட்டது. கடந்த 20 வருடங்களாக இலங்கை அரசில் மாறி மாறி அமைச்சராக சேவை செய்து வரும் டக்ளஸ், இத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர் ஆகி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை ஈட்டுவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்வாரா? என்பது கேள்விக்குறியே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் ‘ழுநெ ஆயn ளூழற’ என்ற இவரின் செயற்பாடுகள் பேரம் பேசும் இவரின் பலவீனங்களையே மேலெழச் செய்துள்ளது. தமது அமைப்புக்குள்ளேயே ஒரு பன்முகப்படுத்தப்பட்ட தலைமையை உருவாக்கி பலம் பொருந்திய அமைப்பை உருவாக்க முடியாத தனிமனித அணுகுமுறையையே டக்ளஸ் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறாமல் தனது செயற்பாட்டாக கொண்டிருக்கின்றார். புலிகளின் பிரசன்ன காலகட்டத்து ஆயுத அரசியலில் இருந்து புலிகளின் பிரசன்னம் அற்ற காலகட்டத்து ஆயுதம் அற்ற அரசியல் நிலையில் இவரின் ‘சுயாதீன’ ஜனநாக செயற்பாடுகள் எந்தளவிற்கு வெற்றியளிக்கப் போகின்றது என்பதை இப்போதே ஆரூடம் கூறலாம். ஆனாலும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
இதேவேளை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இம்முறை கிழக்கைத் தாண்டி வடக்கிலும் போட்டியிட முன் வந்துள்ளது. இவர்களின் தாண்டும் நிகழ்வு யாராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. வடக்கு கிழக்கு மக்களின் ஐக்கியத்திறகான முன்னெடுப்பாக இது அமையுமானால் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். மாறாக தங்களது முன்னாள் சகாக்களின் ‘அனுதாப’ வாக்குக்கள் பெறுதல் என்ற ‘பொரிமாத் தோண்டி’ கதையாக அமையுமானால் இதனை வேறுவிதமாகத்தான் பார்க்க வேண்டும். ஜனநாக விழுமியங்களை சுவாசிக்க விரும்பும் ஆரோக்கிமான நகர்வுகளை நாம் வரவேற்று ஆதரிக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், மக்கள் என்ற பார்வை ஆயுதம் அற்ற நிலையிலும், ஆயுதம் உள்ள நிலையிலும் ஏற்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக