27 பிப்ரவரி, 2010



தேர்தல் களத்தில் மலையகம் - கொழும்பில் முக்கிய பிரமுகர்கள்


இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தேர்தல் எதிர்வரும் ஏப்பரல் மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தத்தமது வேட்பு மனுக்களைக் கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தன.

மலையகத்தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற மாவட்டங்களில் மலையகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

மலையகத் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ,மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் ,சட்டத்தரணி இராஜதுரை இவர்கள் இ.தொ.கா.வின் சார்பாகவும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.அருள்சாமி ,முன்னாள் பிரதி அமைச்சர் வி.புத்திரசிகாமணி ஆகியோர் தமிழ் வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் வேட்பாளர்களாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் இந்த முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக எல்.பாரதிதாசன் பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஜெயரட்ணம் ஸ்ரீரங்கா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் இந்த மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனது சின்னமான மண்வெட்டி சின்னத்தில் தனித்துப்போட்டியிடுகின்றது. இந்த முன்னணியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் போட்டியிடுகின்றனர்.

கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் சார்பாக மொஹமட் பைசர் முஸ்தபா ,து.மதியுகராஜா ஆகியோர் சிறுபான்மை மக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் .காதர் ,எம்.எச்.ஹலீம் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கிம் ,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் , மத்திய மாகாணசபை உறுப்பினர் டப்ளியூ .ராஜரட்ணம் ஆகியோர் சிறுபான்மை மக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் ,இ.தொ.கா.வின் வேட்பாளர்களான டி.வி.சென்னன் ,எஸ்.சந்திரமோகன் ஆகிய மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடுகின்றது.இதன் முதன்மை வேட்பாளராக ஊவாமாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் போட்டியிடுகின்றார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக முன்னாள் பிரதிக்கல்விக்கல்வியமைச்சர் சச்சிதானந்தன் ,ஊவாமாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் ,ரசாக் ஆகியோர் சிறுபான்மை மக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக இ.தொ.கா.வின் சார்பாக ஏ.எம்.டி.ராஜன் , இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக எம்.சந்திரகுமார் ஆகியோர் சிறுபான்மை தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர்.

மாத்தளை மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் இ.தொ.கா.வின் சார்பாக செந்தில் சிவஞானம் போட்டியிடுகின்றார். இதே வேளை கொழும்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இ.தொ.கா.வின் சார்பாக ரவிச்சந்திரன் ,மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக மேல்மாகாணசபை உறுப்பினர்களான பிரபாகணேசன் , குமரகுருபரன் ஆகியோர் சிறுபான்மைத்தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக