சென்னை மாநகரில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு குற்றவாளிகள் சிக்கி வருகிறார்கள்.
நேற்று இரவும் சென்னை முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிடிவாரண்டு குற்றவாளிகள் 32 பேரும், பழைய குற்றவாளிகள் 26 பேரும், சந்தேக நபர்கள் 232 பேரும் அடங்குவர்.
மெரீனா கடற்கரையிலும் போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். சந்தேகத் துக்கிடமாக கடற்கரையில் தூங்கியவர்களையும் தட்டி எழுப்பி விசாரித்தனர். மெரீனா கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தூங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித் தனர். அப்போது இலங்கை தமிழில் அவர் பேசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மெரீனா போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் தன்னுடைய பெயர் முகமது அன்சாரி என்றும், தனது சொந்த ஊர் இலங்கை பொத்தளம் என்றும் கூறினார். பாஸ்போர்ட் எதுவும் அவரிடம் இல்லை.
இதனால் அவர் மீதான சந்தேகம் தீவிரமானது. உடனடியாக உளவுப்பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் விரைந்து சென்று விசாரித்தனர். முகமது அன்சாரியின் கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். மெரீனா போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுற்றுலா விசாவில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் மெரீனா கடற்கரையிலேயே தங்கிவிட்டேன் என்று முகமது அன்சாரி கூறியுள்ளார்.
மீனவர்கள் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை படகில் இருந்து இறக்கும் வேலைகளை இவர் செய்து வந்துள்ளார். இவருடன் வேறு யாரும் வந்து இதுபோல தங்கியுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் கடற்கரை யில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தப்பிச்சென்றார். அவர் யார் என்று தெரியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க லாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை பிடிப்பதற்காக போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க முகமது அன்சாரி என்ற இலங்கை தமிழர் சென்னையில் சிக்கியுள்ளார். இலங்கையில் இருந்து படகில் ராமேசுவரத்துக்கு வந்து அங்கிருந்து தப்பிச் சென்றவர் இவரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக