:
மெல்போர்ன், ஏப்.17: ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள எரிமலை சீற்றத்தால் வெளியேறும்சாம்பல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 100 கோடி டாலரை (ரூ.4,227 கோடி) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிமலை சாம்பல் வெளியேற்றம் காரணமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12-க்கும் அதிகமான விமான நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. மேலும் மூன்று நாள்களுக்கு இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 100 கோடி டாலரைத் தாண்டும் என இத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் சுமார் 60 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பியநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் பரிதவிக்கின்றனர். டெல்டா ஏர்லைன்ஸ் இன்கார்ப்பரேஷன், பிரிட்டிஷ் ஏர்வேஸ், குவாண்டாஸ் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்த நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை.
ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல்5,500 அடி உயரம் வரை மேலே எழும்பியதால் வான் வெளியில் இது பரவியுள்ளது. இதனால் விமானங்கள் இப்பகுதியில் பறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பிரிட்டன் வான்பரப்பு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி வரை மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் பிராங்பர்ட் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குவாண்டாஸ் நிறுவனம் தனது 4 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 8 விமானங்களை ரத்து செய்துள்ளது. ஏர் சீனா லிமிடெட், நிப்பான் ஏர்வேஸ் நிறுவனம் உள்ளிட்டவையும் சேவையை ரத்து செய்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக