27 மார்ச், 2010

இந்திய மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை



:

மாணவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மாணவர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பிரிட்டனில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.​

உயர் கல்வி என்ற பெயரில் அவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கப்படுகிறது.​ ஆனால் அதற்கேற்ப கல்வி போதிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

பிரிட்டன் பல்கலைக்கழங்களின் முகவர்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர்.​ ​ வெளிநாட்டில் உயர் கல்வி என்ற ஆசையில் முகவர்கள் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் பிரிட்டனில் படிக்கச் செல்கின்றனர்.

சாதாரணமாக பிரிட்டன் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தைபோன்று மூன்று மடங்கு கட்டணம் இந்திய மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.​ அதாவது முதுகலைப் பட்டத்துக்காக ஓராண்டுக்கு பிரிட்டன் மாணவரிடமிருந்து ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்போது,​​ அதுவே இந்திய மாணவரிடமிருந்து ரூ.6 லட்சமாக வசூலிக்கப்படுகிறது.​

இவ்வாறு பணத்துக்காகவே பிரிட்டனில் உள்ள சில பல்கலைக்கழங்கள் செயல்பட்டுவருவதுடன் அவற்றின் கல்வி போதிப்புத் தரமும் மிகவும் மோசமாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.​ இதனால் இந்திய மாணவர்கள் பலர் ஏமாற்றம் அடைகின்றனர் என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமை அதிகாரி மார்ட்டின் டேவிட்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:​ கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை அழைத்து வருவதில் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன.​ இதன் மூலம் அப்பல்கலைக்கழங்கள் பணம் கொழிப்பதால்,​​ கல்வியை போதிப்பதில் கோட்டைவிடுகின்றன.​

இதனால் அதுபோன்ற பல்கலைக்கழங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.​

இதன் மூலம் அப்பல்கலைக்கழங்கள் அதிக அளவில் மாணவர்களை தேர்வு செய்வது தடுக்கப்படும் என்று டேவிட்சன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக