27 மார்ச், 2010

இஸ்லாத்துக்கு மாறிய சிங்களப்பெண்ணை விடுவிக்குமாறு கோரிக்கை

பௌத்தத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் மனிதஉரிமை ஆர்;வலர்கள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாரா மலனி பெரேரா என்ற சிங்களப்பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும், மதங்களை ஒப்பிட்டும் இருநூல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டொக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும், அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டதாகவும் பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருளிலிருந்து வெளிச்சத்துக்கு என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக