27 மார்ச், 2010

இலங்கையில் வறுமையால் மகன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பெண்!




இலங்கையில் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் 4 குழந்தைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் ஒரு பெண்.

​ பெண்ணின் துயரமான வாழ்க்கை நிலைமையையும்,​​ அவரது கோரிக்கையையும் பரிசீலித்த நீதிபதி,​​ 4 குழந்தைகளையும் ஏற்று அரசு குழந்தை காப்பக மையத்திடம் ஒப்படைத்தார்.

​ அந்த பெண்ணின் மற்றொரு மகன் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தான்.

​ வறுமையால் 3-வயதுடைய அந்த சிறுவனை அவரது தாய் தான் ஆற்றில் தூக்கி வீசினார் என்றும்,​​ இதனால் கோமா நிலையை அடைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்றும் புகார் கூறப்பட்டது.

​ இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய அந்த பெண்,​​ தனது நிலைமையை எடுத்துக்கூறி தனது 4 குழந்தைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.​ இதை பரிசீலித்த நீதிமன்றமும் 4 குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு அரசு குழந்தை காப்பக மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.​ இதையடுத்து அந்த 4 குழந்தைகளையும் அரசே ஏற்றுக்கொண்டது.

​ இலங்கையின் மேற்கு பகுதியான ஹோமகாமாவில் அந்த பெண் தனது கணவர்,​​ 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.​ இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் அவரை குழந்தைகளுடன் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.​

இதனால் வாழ்க்கை நடத்த வருமானம் ஏதும் இன்றி அந்த பெண் தனது குழந்தைகளுடன் திண்டாடியுள்ளார்.​ வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை.​ இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் நெருக்குதல் அளித்துள்ளார்.

​ அந்த பெண்ணின் தாய்,​​ தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டனர்.​ அவருக்கு இருந்த ஒரே ஆதரவு அவரது சகோதரிதான்.​ ஒரு சில மாதங்கள் உதவி வந்த அவரது சகோதரியும் மேலும் உதவ முடியாத நிலைக்கு ஆளானார்.​

இதனால் அந்த பெண் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.

​ இதனால் விரக்தி அடைந்துதான் ஒரு மகனை ஆற்றில் வீசியதாகவும்,​​ பிற குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்து யோசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.​

இந்நிலையில் அவரது நிலைமையை அறிந்த சிலர் நீதிமன்றத்தை அணுக யோசனை தெரிவித்ததாகவும்,​​ இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக