27 மார்ச், 2010

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்


பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் 'கல்ப் டெய்லி நியூஸ்' ,

"தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.

பாஹ்ரேனில் இருக்கும் அவரது சகோதரி தெரிவிக்கையில்,

"இஸ்லாம் மதம் குறித்தும், மதங்களை ஒப்பிட்டும் இரு புத்தகங்களை சாரா மலனி பெரேரா எழுதியுள்ளார். இவற்றுள் ஒன்று 'இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு'. இந்தப் புத்தகத்தில், ஏன் அவர் மதம் மாறினார் என்பது குறித்து எழுதியுள்ளார்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக