27 மார்ச், 2010

வன்னி மாவட்டத்தில் 209சாதாரண வாக்களிப்பு நிலையங்களையும் 32இடம்பெயர்ந்தோருக்கான வாக்களிப்பு நிலையங்களையும் அமைக்க ஏற்பாடு




எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 209 சாதாரண வாக்களிப்பு நிலையங்களும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென 32வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்காக 16வாக்களிப்பு நிலையங்களும் சரணடைந்து புனர்வாழ்வு நிலையங்களில் வாழும் வாக்காளர்களுக்கென 12வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.


வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 50வாக்கெடுப்பு மாவட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முல்லைத்தீவு தொகுதியில் தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட பகுதியில் 18வாக்களிப்பு நிலையங்களையும், மீளக்குடியமர்த்தப்படாத பிரதேசங்களுக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 32வாக்களிப்பு நிலையங்களையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் தேர்தல் தொகுதியில் 02இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் வதியும் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்களை புத்தளத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதியில் 85,322 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களும், வவுனியா தேர்தல் தொகுதியில் 1,12,924 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 68,729 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுமாக மொத்தம் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 2,66,975 வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக