24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 9





01-07-2009 தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றியபோதிலும் தேசியம் என்ற மாயையால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று எண்ணுகின்றது போலும்......


யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை, ஊவா மாகாணசபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளன. ஊவா மாகாணசபைத் தேர்தல் பற்றி தமிழ் மக்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. ஏனைய இரண்டு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்ற களிப்பில் அரசாங்கம் நடைபெறவிருக்கும் மூன்று இடங்களுக்குமான தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும். அரசின் நோக்கம் மூன்று இடங்களிலும் வெற்றிலைச் சின்னம் வெற்றி பெறவேண்டும் என்பதேயாகும். எனவேதான் இரண்டு உள்ளுராட்சி சபைகளிலும் .பி.டி.பி. யை வெற்றிலைச் சின்னத்தில் கேட்க வைத்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் பல அபிவிருத்தி வேலைகளை அரசு அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மீன்பிடிப்பதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டுக்கான மின்வினியோகத்தை அதிகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்கட்சியான .தே.கட்சி நடைபெறவிருக்கும் மூன்று தேர்தல்களிலும் போட்டியிடுகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள்பால் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் அக்கறை அரசுக்கு கிடையாது என குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றினால் -9 பாதையை 24 மணிநேரத்தில் மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடுவதாக ஜயலத் ஜெயவர்த்தன தெரிவிக்கிறார்.
இனப்பிரச்சினைக்கு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகளின்போது ஐக்கிய தேசியக் கட்சி சரியான முடிவு எடுத்திருந்தால் இலங்கையில் இப்போது ஏற்பட்ட பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்த ஒவ்வொரு முயற்சியின்போதும் தீர்வை தடுப்பதற்காக செயற்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது வடக்கு கிழக்கு மாகாண சபையை இயங்காமல் செய்தனர்.
பொதுசன ஐக்கிய முன்னணி கொண்டுவந்த தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்குகூட எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கவில்லை. விவதத்திற்கு அனுமதித்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதற்கான காரணத்தைக் கூறவேண்டி இருக்கும். அப்போது தமிழ் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடலாம் என்பதாலேயே தீர்வுத்திட்டத்தை விவாதத்திற்கும் விடாமல் தடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. இவர்கள் இப்போது யாழ், வவுனியா உள்ளுராட்சி தேர்தல் களங்களில் நின்று இனப்பிரச்சினை பற்றி பேசுகின்றனர்.
வடக்கில் 1998ம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை.
ஆனால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகி வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் பின்போடப்பட்டு வந்தன. அப்போது உள்ளுராட்சித் தேர்தல்களை தீவிரமாக எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் போட்டியிடுகின்றது.
தேர்தலை விரும்பாத புலிகளின் அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் உள்ளுராட்சித் தேர்தல்களை பகிஷ்கரித்து வந்தது. இப்போது புலிகள் அழிந்ததும் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஆகியன குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேசப்போவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தங்களுக்கு அறிவுறுத்தல் கிடைத்ததாலேயே தாங்கள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அவர்களுக்கு அறிவுறுத்தல் யாரிடம் இருந்து கிடைத்தது என்பதை அவர் தெரிவிக்காவிட்டாலும் அது மக்களுக்கு விளங்கும். அப்படியானால் இதுவரை காலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தாங்கள் செயற்பட்டது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது இப்போதைய நிலைப்பாடு தந்திரோபாயமான செயற்பாடா என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய தேர்தல் களத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ் மக்களின் இன்றைய அகதி வாழ்க்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒருவிதத்தில் காரணகர்த்தாவே. புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய சர்வதேசத்தினூடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் இவர்கள் காலம் கடத்தினரே அன்றி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண எந்தச் சந்தர்ப்பத்திலும் முயற்சிக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி தொடர்பாக ஜனாதிபதியும், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை உதாசீனப்படுத்தி வந்தது.
சந்திரிகா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கொண்டுவந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை இனவாத கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் எதிர்த்தது. .பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்டம் தமிழ் நாட்டு அரசுக்கு இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் கொண்;டது என இந்திய அரசியல் வல்லுனர்களே தெரிவித்திருந்தனர். இந்த தீர்வுத் திட்டதை இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தது மாத்திரமன்றி அதன் பின்னர் பொதுசன ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக .தே.கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் நடத்திய போராட்டங்களில் இவர்களும் முன்நின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றியபோதிலும் தேசியம் என்ற மாயையால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று எண்ணுகின்றது போலும்.
மேற்குறிப்பிட்ட எல்லாக் கட்சிகளையும் வவுனியா, மற்றும் யாழ் தேர்தல் களத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( புளொட், பத்மநாபா .பி.ஆர்.எல்.எவ், .வி.கூ) சந்திக்கிறது. வவுனியா தேர்தல் களத்தில் முன்னாள் நகரசபைத் தலைவர் லிங்கநாதன் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புளொட்டின் சின்னமான நங்கூரத்திலும், யாழ் மாநகர சபையில் ஆனந்தசங்கரி தலைமையில் .வி.கூட்டணியின் சின்னமான சூரியனிலும் களத்தில் நிற்கின்றது. வவுனியா நகரசபைக்கு கடைசியாக நடைபெற்ற தேர்தலில் புளொட் வெற்றிபெற்று லிங்கநாதன் தலைமையில் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தி வவுனியாவில் பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டிருந்தது. இலங்கையிலேயே சிறந்த நகரசபையாக வவுனியா நகரசபை அப்போது தெரிவுசெய்யப்படதையும் குறிப்பிடவேண்டும். இவர்களுக்கு பின் வவுனியாவில் எந்த ஒரு நகர அபிவிருத்தியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக