வன்னி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களுக்காக அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலையமான 20 சதுர கி.மீ.ற்றர் நிலப்பரப்பு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புலிகளிடம் இருந்து பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் கடைசியாக இருந்த ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பையும் கடுமையான போராட்டத்தின் மத்தியிலேயே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசம் படையினர் வசம் முழுமையாக விழ்ந்ததுடன் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பு முழுவதையும் இழந்து எஞ்சியிருந்த புலிகள், பொதுமக்களுக்காக அரசு பிரகடனப்படுத்தியிருந்த பாதுகாப்பு வலையத்துள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு வலையத்துள் சென்ற புலிகள் ஒடுக்கப்படும்வரை வன்னி படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கருதமுடியாது. ஆனாலும் இவ்வளவு கனரக ஆயுத பலத்துடன் இதுவரை போராடியும் பாதுகாப்பு படையினருடன் தாக்கு பிடிக்க முடியாத புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியும் என எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்கள் கேடயமாக பயன்படுவர். எனவே பாதுகாப்பு வலையத்துள் ஊடுருவியுள்ள புலிகளை எவ்வாறு பாதுகாப்பு படையினர் வெற்றி கொள்ளப்போகிறர்கள் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஏற்கனவே பாதுகாப்பு வலையத்தில் இருந்துகொண்டு புலிகள் தாக்குதல் நடத்துவதாக அரசு குற்றம் சாட்டி வந்துள்ளது. எனவே அடுத்து அரசு என்ன செய்யப்போகிறது என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும். யுத்த நிறுத்தக் கோரிக்கையும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
அதேநேரம் புலிகளுடன் எந்தவித யுத்த நிறுத்தமும் மேற்கொள்ள அரசு தயாராக இல்லை என்றும் பொது மக்கள் நலன் கருதி அவ்வப்போது மோதல் தவிர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரப்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு மோதல் தவிர்ப்பு மேற்கொள்ளப்பட்டாலே பொதுமக்கள் பாதுகாப்பு வலையத்தை விட்டு வெளியேற வாய்பாக இருக்கும். அதேவேளை தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவே போராடுவதாக கூறும் புலிகள் தமிழ் மக்களின் எதிரிகள் என்று அவர்களால் வர்ணிக்கப்படும் அரசிடம் இருந்து மக்களின் பாதுகாப்புக்கு அனுசரணையை எதிர்பார்ப்பதை விட மக்கள் வெளியேறி தமது பாதுகாப்பை தாமே தேடிக்கொள்ள புலிகள் அனுமதித்தாலே மக்களின் பாதுகாப்பில் புலிகளுக்குள்ள அக்கறையை புரிந்து கொள்ளமுடியும்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம்வரை ஆறு நாள் நடந்த யுத்தத்தின் பின்னர் பாதுகாப்பு படையினரின் தேடுதலின்போது 525 பலிகளின் சடலங்களும் ஏராளமான கனரக ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்ததுடன் தொலைக்காட்சியிலும் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த யுத்தத்தில் புலிகளின் படையணித் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலையில் ஆயுதப் போராட்டத்தின் முடிவு தெரிந்துவிட்டது. ஆயுதப் போராட்டத்தின் பெறுபேறு என்ன என்ற கேள்விக்கு விடை தேடினால் கிடைப்பது தமிழ் மக்களுக்கு இழப்புகளும் அகதி வாழ்க்கையும்தான். குறிப்பாக சொல்லப் போனால் ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு துன்பங்களைத் தவிர வேறு எதையும் பெற்றுத் தரவில்லை. ஈழப் போராட்டத்தில் இதுவரை புலிகள் அடைந்த தோல்வி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
கடந்த காலங்களில் சர்வ தேசத்தின் அனுசரணையுடன் யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் சார்பில் பங்குபற்றிய புலிகள் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்பி வந்தனர். அந்த நிலையில் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களில் இனப்பிரச்சினை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் ஈழத்துக்கு ஆதரவாகவும் புலிகள் தமது நிலப்பரப்பை அதிகரிக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்தன. இவை புலிகளின் கருத்தா அல்லது புலிகளுக்கு சொல்லப்பட்ட கருத்தா என்பதல்ல இங்கு பிரச்சினை. புலிகள் தமது நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டுமானால் யுத்தம்தான் அதற்கு வழி.
இந்த நிலையில்தான் மகிந்த ஜனாதிபதியாக வந்த பின்னர் புலிகள் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சிறு சிறு தாக்குதல்களை வெவ்வேறு வடிவங்களில் மேற்கொண்டு வந்தனர். அதேவேளை அரசு யுத்தநிறுத்த மீறல்களை மேற்கொள்வதாக புலிகள் குற்றம் சாட்டி வந்தனர். எப்படியும் பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்ற நோக்குடன் சர்வதேசம் இந்த யுத்த நிறுத்த மீறல்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்;லை. புலிகளைப் பொறுத்தவரை தமிழீழமே அவர்களின் தாரக மந்திரம். அதை அடைவது பேச்சுவார்த்தை மூலம் சாத்தியப்படாது. எனவே யுத்தம் ஆரம்பிக்கப்படவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது. ஆனால் யுத்தத்தை அரசே ஆரம்பிக்க வேண்டும் என புலிகள் எதிர்பார்த்தனர்.
கிழக்கு இலங்கை குறிப்பாக மூதூர் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை திருமலை துறைமுகத்துக்கு புலிகளால் ஆபத்து இருப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வுக் குழு அரசை எச்சரித்து இருந்ததால் மூதூரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டிய தேவை அரசுக்கு இருந்தது. ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அரசால் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இரு தரப்பினருமே யுத்தத்தை எதிர்பார்த்து யுத்த நிறுத்த காலத்தில் யுத்த தயாரிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தனர். இந்த நேரத்தில்தான் அரசு யுத்தத்தை ஆரம்பிக்க காரணமாக அமைந்தது மாவிலாறு அணையை புலிகள் மூடிய சம்பவம். இந்த அணையை திறக்கும்படி சர்வதேசம் விடுத்த வேண்டு கோளையும் புலிகள் புறக்கணித்தனர். இதனால் மனிதாபிமானப் பிரச்சினை என்ற காரணத்தை காட்டி அரசாங்கம் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. சர்வதேசமும் மௌனத்தின் மூலம் யுத்தத்தை ஆதரித்தது.
யுத்தம் ஆரம்பித்ததன் மூலம் இருதரப்பினரின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது. தமது கட்டுப்பாட்டில் நிலப்பரப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் புலிகளும், மூதூரை விடுவிக்கும் நேக்கத்துடன் இருந்த அரசும் தங்களது பலப்பரீட்சையை ஆரம்பித்தனர். இந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் பலியானார்கள். அன்று மாவிலாற்றில் தொடங்கிய யுத்தம் இன்று புதுக்குடியிருப்பில் முடிவுறுகிறது.
பெறுபேறு புலம்பெயர்ந்த நாடுகளில் கஷ்டப்பட்டு மக்கள் உழைத்த பணத்தை போராட்டம் என்ற பெயரில் புலிகள் பெற்றும், பறித்தும் உள்ள பணமும் உள்ளுரில் பொதுமக்களிடம் வரி, கப்பம் எனப் பெற்ற பணமும் சரியான முறையில் பயன்படவில்லை. அதேவேளை பல்லாயிரக்கணக்கில் எதிர்காலச் சந்ததிகளையும் இழந்துள்ளோம்.
இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டங்களை நடத்தும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் இடம் பெயர்வுகள் ,அழிவுகள் அப்போது பெரிதாகப் படவில்லை என்ற குற்றச் சாட்டு இன்றும் கிழக்கில் எதிரொலிப்பதை காணமுடிகிறது. இதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது. மொத்தத்தில் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து நிற்கிறது தமிழ் சமுதாயம்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக