24 ஆகஸ்ட், 2009

29.07.2009 தாயகக்குரல் 13



தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியபின் சுமார் ஆறு வருடங்களில் இப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதுபற்றி சுயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வொன்றைக் காணும்வகையில் மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத்திட்டம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசத்திடம் முன்வைக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுயஉரிமைத் தத்துவம், தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளும் சுயாட்சிமுறை ஆகிய மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் அமையும் என மாவைசேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப் படுத்தி வருவது அகில இலங்கைத் தமிழசுக் கட்சியை பிரதானப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். இதுவரை இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள்தான் என்ன?.
இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பலராலும் பேசப்படும் சுயநிர்ணய உரிமை கோட்பாடு தமிழ்மக்கள் சார்பில் முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களால் முன்வைக்கப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்காது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் முதலில் உருவான கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் 1936ல் நடைபெற்ற தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார். அப்போது அமைக்கப்பட்ட மந்திரிசபை தனிச்சிங்கள மந்திரிசபையாக இருந்தது. இதனால் ஜீ.ஜீ. அவர்கள் 50: 50 கோரிக்கையை முன்வைத்தார். எல்லா விடயங்களிலும் பெரும்பான்மையின மக்களுக்கு உள்ள அதே உரிமைகள் சிறுபான்மை இனமக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும். அந்தக் கோரிக்கை தோல்வியடைந்ததும் 1947ல் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் எஸ்.ஜே.வி.செல்வநாயம் தலைமையில் பிரிந்து 1949ல் உருவாகிய இலங்கைத் தமிழசுக்கட்சியும் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையை வலியுறுத்தி வந்தது.
சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைத்த ஜீ.ஜீ. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவையில் இணைந்த போது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார். காலத்துக்கு காலம் ஜீ.ஜீ. யின் 50:50 கோரிக்கையும், தமிழரசுக் கட்சியின் சமஅந்தஸ்து கோரிக்கையும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்ததை மறுக்கமுடியாது.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினையை மையமாக வைத்தே அரசியல் நடத்திவந்த இவர்களால் இதுவரை இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீhவையும் காணமுடியவில்லை. அதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் இவர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையை திட்டமிட்டு பறித்த இந்த சிங்கள இனவாத அரசுகளிடம் இருந்தே இந்த மக்களை பிரதிநித்துவப் படுத்திய தலைவர்கள் தங்களுடைய தீர்க்தரிசனமான அணுகுறைகளால் மீண்டும் தங்கள் மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தனர். ஆனால்; வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்களால்மட்டும் ஏன் இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வும் காண முடியாமல் போயிற்று.
அதற்கு ஒரு காரணம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி தலைவர்களுடைய வர்க்க குணாம்சமாகும். இவர்கள் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் மென்மையான போக்கையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காலத்தில் தீவிரமான போக்கையும் கடைப்பிடித்து வந்ததால் இவர்களால் எந்த அரசிடமும் தீர்வை எட்டமுடியவில்லை.
1972 தமிழ் காங்கிரஸ் தமிழரசுக்கட்சி ஆகியன இணைந்து தமிழ் கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணி 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணியானது. இதன் முதலாவது மகாநாட்டில்தான் தனிநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தனிநாட்டு தீர்மானம் கூட்டணியின் தந்திரோபாயமான அரசியல் தீர்மானமேயன்றி அவர்கள் தனிநாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதை அமிர்தலிங்கம் அவர்களே சிலரிடம் தெரிவித்திருந்ததுடன் அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எதிர்பாரத விதத்தில் இனப்பிரச்சினை தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுத்தது. இதன் விளைவாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தம் செயற்படாமல் போனதற்கான காரணம் தனியாக ஆராயப்படவேண்டிய விடயம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக புலிகளுக்கும் அரசுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இருதரப்பினரிடையே போர் ஆரம்பித்தது. இடையிடையே போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்ற நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றாலும் சமாதானகாலத்தில் இரு தரப்பினரும் தங்கள் ஆயுத பலத்தை பெருக்கினரே அன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயம் பேச்சுவார்த்தையில் ஆராயப்படவில்லை.
2001ம் ஆண்டு தேர்தலில் சமாதானத்துக்கான மக்கள் ஆணை கேட்டு வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கா நாட்டின் தலைவி என்ற முறையில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஆலோசிக்காமலே, அவரின் ஒப்புதல் பெறாமலே புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளுக்கே ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்மூலம் நிரந்தர சமாதானம் ஏற்படும் என மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்தக் காலத்திலேயே தமிழர்விடுதலைக் கூட்டணி, ரெலோ, .பி.ஆர்.எல்.எவ் ஆகியன இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைபை உருவாகியது. இந்தக் கூட்டை விரும்பாத இக்கட்சிகளின் உறுப்பினர்கள் பிரிந்து தனியான அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர்.
வடக்கு கிழக்கில் புலிகள் ஆயுதபலத்துடன் இருந்ததால் 2004ல் நடந்த தேர்தலில் புலிகளின் ஆதரவுடன் தங்கள் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தனர். 2001 வரைதேர்தலில் பங்குபற்றுவோரை துரோகிகள் எனக்கூறி கொலை செய்துவந்த புலிகள் 2004 தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தனது ஆட்களையும் தேர்தலில் போட்டியிட வைத்து தேர்தல் மோசடிகள்மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பின் 22 பிரதிநிதிகளை தெரிவு செய்ய வைத்தனர்.
புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு முக்கிய தலைவர் கொல்லபட்டுவிட்டார்கள் என்ற செய்தி வெளியாகும்வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஈழத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள் உடனேயே ஈழத்தை நாங்கள் எப்போதும் ஆதரிக்கவில்லை அரசியல் தீர்வுக்குத் நாங்கள் தயார் எனக் கூறினர். இப்போது இறைமை, சுயஉரிமை, சுயாட்சி பற்றி தீர்வுத்திட்டம் தயாரிக்கப்போவதாக தெரிவிக்கினி;றனர்.
சிறீலங்கா இனவாத அரசு தமிழர் பிரச்சினையை தீhவு எதையும் தராது என்று அடிக்கடி கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வை யாரிடம் இருந்து பெறப்போகிறார்கள். இந்தியாவிடமா? அல்லது சர்வதேசத்திடம் இருந்தா.? தீர்வுத்திட்டத்தை தயாரித்து இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் வழங்குவதாக தெரிவித்துள்ளமை இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்திய அரசியலமைப்புக்கு மேலான உரிமைகளை இந்தியா பெற்றுக்கொடுக்குமா? இந்தியாவை மீறி சர்வதேசம் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுமா? என்பதை ஆராயும் பக்குவம் மக்களுக்கு வந்துவிட்டது.
ஆனால் இப்போதும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக