24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 2




இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை மையமாக கொண்டு சர்வதேச நாடுகள் பலவற்றில் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் நடைபெறுகின்றன. ஒரு காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கடத்தியோ உண்ணாவிரதம் இருந்தவர்கள் மேல் சோற்றுப் பொதிகளை எறிந்தும் அந்த உண்ணாவிரதங்களை கேலிசெய்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் குழப்பியவர்கள் புலிகள். இன்று இவர்கள் சர்வதேச நாடுகளில் தமது இயக்கத்தை காப்பாற்ற உண்ணாவிரதம் இருக்கின்றனர். வன்னியில் யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் இவர்களுடைய உண்ணாவிரதம் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் திருப்பியதாகத் தெரியவில்லை.

தமிழக தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையிலும் இந்திய அரசு பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்றுதான் கூறுகிறது. சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தத்திற்கு இலங்கையை நிர்ப்பந்தம் செய்வதாகவும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதை தடைசெய்வதாகவும் புலிகள் சார்ந்த பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இன்னொரு பக்கம் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தத்திற்கு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவில்லை எனவும்; அப்படி நிர்ப்;பந்தம் செய்தாலும் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளமாட்டோம் எனவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு வெளியே சர்வதேச சமூகம் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக என்ன கருத்தை தெரிவித்தபோதிலும் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இலங்கை நிலமைகள்பற்றி அரசுக்கு சார்பான கருத்தையே தெரிவிக்;கின்றனர்.

கடந்த சில நாட்களாக சர்வதேச சமூகத்தின் விசேட பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டு சென்றனர். குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் யப்பான் விசேட தூதுவர்,கனடா சர்வதேசகூட்டுத்தாபனத்தின் அமைச்சர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் வவுனியா நிவாரணக் கிராமங்கள் சிலவற்றை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது கருத்து தெரிவிக்கையில் பிரபாகரனை காப்பாற்றுவது சர்வதேசத்தின் நோக்கமல்ல. யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களை கருத்தில் கொண்டே செயற்படுகிறோம். தற்போது மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் காலம் உருவாகியுள்ளது. மனிதாபிமானச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்திருந்தார். மேலும் பாதுகாப்பு வலையத்துள் சென்று பணியாற்ற .சி.ஆர்சி. மற்றும் தொண்டர் நிறுவனங்களை அரசு அனுமதிக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த வியாழன் அன்று இலங்கைக்கு விஜயம் செய்த யப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஸி வெள்ளிக்கிழமை வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களின் நிலைமைகளை பார்வையிட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் சுகாதாரம், நிவாரணம், கல்வி, இருப்பிட வசதிகளை அரச அதிபரிடம் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்துகொண்டார். அவர் அரசின் சேவைகளைப் பாராட்டியதுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. மேலும் இலங்கையில் சமாதானம் ஏற்பட தம்மால் ஆன உதவிகளை அரசுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வன்னி மக்களுக்கு அரசாங்கம் செய்யும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க யப்பான் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இலங்கைக்கு ஒருநாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கள் அன்று இலங்கை வந்த கனடா அமைச்சர் பிவர்லி ஜே.ஓடா, கனேடிய அரசாங்கம் தமது மண்ணில் புலிகளுக்கு ஆதரவான எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவளிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் கொடியையும், இயக்கத் தலைவரின் படத்தையும் காட்டி தமிழர்களைக் காப்பாற்று என போராட்டம் நடத்தினால் எந்த நாடுதான் அந்தப் போராட்டத்தை கவனத்தில் கொள்ளும். இதை புலிகள் கவனத்தில் கொள்ளாது நடத்தும் போராட்டம் தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையாமல் இருந்தால் போதும்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்குவதை நிறுத்தி வைப்பதற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தச் செய்திகளில் உண்மை இல்லை எனவும் இலங்கைக்கு இரண்டு பில்லியன் டொலர் கடனை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதை தடுப்பதற்கோ இலங்கைக்கு எதிராக எவ்வகையான நடவடிக்கையையும் எடுப்பதற்கோ அவசியம் இல்லை என .நா. பாதுகாப்பு சபையின் தலைவர் கிளோட் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும் நிலையில் தமிழ் மக்கள் தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கு முக்கிய கடமைகள் பல உள்ளன. இடம்பெயர்ந்துள்ள மக்களின் உடனடிப் பிரச்சினைகள், அவர்களுடைய மீள்குடியேற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வு முதலியனவாகும். இனப்பிரச்சினை தொடர்பாக இனி புலிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் வைப்பதில்லை என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்த தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரணவும் பாராளுமன்றத்தில் பேசும்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகளை புலிகளுடனான பேச்சுவார்த்தையில் பயன்படுத்துவது என்று திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது அதற்கு அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகளை அகற்றி டிசம்பர் மாதத்திற்குள் மக்களை மீளக்குடியமர்த்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதை துரிதப்படுத்துவது தமிழ் கட்சிகளின் முதல் கடமையாக இருக்கவேண்டும். நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் ஒருலட்சத்து எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட நிலையில் மக்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் அளித்தாலும் மக்களின் தேவைகளை முழுமையாக அரசு பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கமுடியாது.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை ஆராயவென அனைத்து தமிழ் கட்சிகளையும் ஜனாதிபதி அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளர். இக்கூட்டத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் பங்குபற்றி இருந்தன. தமிழ் கட்சிகளில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழு நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் பிரச்சினைகளை ஆராயும் என ஜனாதிபதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை விட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள புலிகளை விடுவிப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து இனமக்களும் இனமத பேதம் இன்றி நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு உதவி செய்யும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் அரசை விமர்சனம் செய்துகொண்டும் யுத்த நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டும் இடம்பெயர்ந்த மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றது.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் இனப்பிரச்சினையாக இருந்தாலும் அவற்றின் தீர்வுக்கு இலங்கை அரசுடன்தான் பேசவேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடனும் இலங்கை வரும் வெளிநாட்டு தலைவர்களுடனும் மட்டும் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண நினைப்பது சாத்தியமாகுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக