24 ஆகஸ்ட், 2009

15.07.2009 தாயகக்குரல் 11


ஊவா மகாணசபை மற்றும் யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் களத்தில் மீள்குடியேற்றம், வடபகுதிக்கான அபிவிருத்தி பற்றியே கூடுதலாக பேசப்படுகிறது.
அரசாங்கம் இத்தேர்தலில் வடபகுதிக்கான அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரங்களை மேற்கொள்ளுகிறது. எல்லாக் கட்சிகளும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பனபற்றி பொதுவாக பேசிவருகின்றன.
இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் வவுனியா நிவாரணக் கிராமங்களை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதியை பேட்டி கண்டபோது ஜனாதிபதி மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க அப்பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். அப்பிரதேசங்களில் இருந்து கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு .நா. வின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அதுவரை மீள்குடியேற்றத்தைச் செய்யமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வவுனியா வடக்கு உதவி பிதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டு புலிகளின் பிடியில் இருந்த 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் எட்டு (நெடுங்கேணி கிராமசேவையாளர் பிரிவு) கிராமங்களில் முதல்கட்டமாக குடியேற்றும் நடவடிக்கைளை மேற்கொள்வதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நிவாரணக் கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நாளொன்றுக்கு 25 கோடி ரூபாவைச் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மக்களை மீளக்குடியமர்த்தினால் இந்தச் செலவுகள் குறையலாம் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்கள் தொகையில் 55ஆயிம் மாணவர்களும் 1969 ஆசிரியர்களும் அடங்குவர். இங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலேயே கூடிய அக்கறை கொண்டுள்ளனர். பிள்ளைகளுக்காகத்தான் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொள்கிறோம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பிள்ளைளின் கல்விக்கான வசதிகளை அரசாங்கம் ஓரளவுக்கு செய்து வருகிறது.
இனப்பிரச்சினை வடபகுதி தேர்தல் களத்தில் மாத்திரமல்ல தென்னிலங்கை தேர்தல் களத்திலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. யுத்தத்தை மூலதனமாக்கி அரசியல் நடத்திய கட்சிகள் யுத்தம் முடிந்துவிட்டதால் இப்போது யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக எதிர்கட்சிகள் வன்னி நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடிப்பதை காணமுடிகிறது.
மக்கள் படும் துன்பம் குறித்து யாரும் கண்ணீர் வடிப்பது மனிதாபிமானம். தமிழ் மக்களின் இன்றைய துயரநிலைக்கு அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் காரணியாக இருந்துள்ளன. எனவே இக்கட்சிகள் மக்களின் துயரங்களுக்காக கண்ணீர் வடிப்பதோடு நின்று விடாமல் மக்களின் துன்பங்களுக்கான காரண காரியங்களை இல்லாமல் செய்ய முன்வரவேண்டும்.
அரசாங்கமும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக தங்களது தெளிவான கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கிறது.
அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காது அரசாங்கம் இழுத்தடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியும் இதுவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு எதனையும் முன்வைக்காத நிலையில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொருந்தலாம். தமிழ் மக்களின் வாக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையான காலங்களில் மட்டும் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி கருத்து தெரிவிப்பது வழக்கம்..
இனப்பிரச்சினை தீர்வில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுசன ஐக்கிய முன்னணியும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் இனப்பிரச்சினைக்கு சுமூகமான ஒரு தீர்வைக் கண்டு விடலாம். தென்னிலங்கை அரசியல் களத்தில் இனப்பிரச்சினையும் முக்கிய கருப்பொருளாக இருப்பதால் இனப்பிரச்சினையில் இரு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வரும் என்பது சந்தேகமே.
இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகமான அதிகாரங்களை வழங்க தயாராக இருப்பதாய் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் கூறிவருகிறார். ஆனால் பல தசாப்த காலமாக இழுபறி நிலைக்கு உள்ளாகிவரும் தமிழர் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் எவ்வித தீர்வும் இல்லையென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கிறார்.
இனப்பிரச்சினை தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்த எதிர்கட்சிகளின் விமர்சனம் ஒருபுறம் இருக்க ஜனாதிபதி இந்து நாளிதழின் ஆசிரியர் ராமுக்கு அளித்த பேட்டியில் பதின்மூன்றாவது திருத்த சட்டமூலத்திற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் எனது அரசியல் தீர்வு வரும். நாளைகூட ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கலாம். எனினும் அதற்கு மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படமாட்டாது என்பது தெளிவு.
நாட்டின் ஐக்கியம், இறைமை என்பவற்றுக்கு பங்கம் ஏற்படாதவரையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா கடந்த புதனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தான் கடந்த காலங்களில் ஏனைய தமிழ்கட்சிகள் கூறிவந்தபோது அவர்களை துரோகிகள் என்று புலிகளுடன் சேர்ந்து விமர்சித்து வந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது வந்துள்ள ஞானோதயம் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வு திட்டத்தை பாராளுமன்றத்தில் எதிர்த்து இனவாதக் கட்சிகளோடு கைகோர்த்தபோது வந்திருக்கவேண்டும். இதை ஒருவகையில் காலம் கடந்த ஞானம் என்றுதான் கூறவேண்டும்.
ஒரு பிரச்சினைக்கான தீர்வை ஒருவர் முன்வைக்கும்போது அதை விமர்சிப்பவர்கள் அதற்கான மாற்றுத்தீர்வை முன்வைக்கவேண்டும். அப்படியின்றி வெறும் விமர்சனம் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக