24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 6

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அதில் இலங்கை முன்வைத்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை இதில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன. இந்த வெற்றி இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் சர்வதேச சமூகம் உறுதுணையாக இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கா தெரிவிக்கிறார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் விவாதம் நடைபெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து கண்டனம் வெளியிட்ட கவுன்சிலின் இந்தியாவுக்கான பிரதிநிதி கோபிநாதன் அசாம்குலாங்கரே, பயங்கரவாதத்தையும், பிரிவினையையும் மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டிருந்த அமைப்பினால் நீண்டகாலமாக நீடித்து வந்த மோதலை இலங்கை இன்று முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் சில நாடுகள் இலங்கைப் பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளர்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியதற்காக இந்தியாவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்ததுடன் இலங்கை மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயற்பட எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் மக்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளுரிலும், சில சர்வதேச நாடுகளிலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் உண்மை நிலையை கண்டறியும் பொருட்டு கடந்த மாதம் 26ம் திகதி அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் _லர் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு விஜம் மேற்கொண்டிருந்தது. அந்தக் குழு வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தனர். இவர்கள் நாடு திரும்புமுன்னர் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையங்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதாகவும், முகாமில் தொலைத்தொடர்பு வசதி, வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பெற்றுக்கொடுத்து சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கூறப்பட்டதற்கும் முகாம்களை நேரில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதாகவும் ஹீத் _லர் தெரிவித்துள்ளார்.
ஹீத் _லர் கூறுவதை பார்த்தால் சர்வதேச நாடுகளில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் கடுமையாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த பிரச்சாரங்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றுக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் விதத்தில் அமைந்தால் அது தமிழ்மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
நிவாரணக் கிராமங்களில் சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் நிவாரணக் கிராமங்களில் பணிசெய்ய .நா. அமைப்பு பணியாளர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று .நா.சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மனிதநேயப் பணிகளுக்குப் பொறுப்பானவருமான நீல் புனே தெரிவித்துள்ளார்.
முகாம்களில் 40 சதவீதமான சிறுவர்கள் இருப்பதாகவும் சிறுவர் போராளிகள் 200 பேர் இனம் காணப்பட்டு அவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு புனரமைப்பில் இலங்கை அரசுடன் இணைந்து .நா.நிறுவனங்கள் தொடர்ந்தும் பணியாற்றும் என்றும் நீல் புனே தெரிவித்துள்ளார்.
யு.என்.எச்.சீ.ஆர் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான தங்குமிட வசதிகள், இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி வசதிகளை செய்து வருகின்றது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிவாரணப் பணிகள், மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசு முன்வைக்கும் திட்டங்களின்படி செயற்பட எந்நேரமும் தயாராக இருப்பதாகவும் யு.என்.எச்.சீ.ஆர் தலைவர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் இலங்கையின் மனிதஉரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதலின்போது இருபதினாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் இது மன்னிக்கமுடியாத குற்றம் எனவும் .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள வயோதிபர்கள், காயமடைந்தவர்கள், அங்கவீனர்களை அவர்களின் உறவினர்களின் பாதுகாப்பின்கீழ் முகாமைவிட்டு வெளியேற்ற அரசு அனுமதியளித்துள்ளது. இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சமூகசேவை அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கத்துடனோ, (தொலைபேசி: 001-2883525) அல்லது பிரதி பொலிஸ் மாஅதிபர் (வடக்குப் பிராந்தியம்) நிமால் லியுகேயுடனோ தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
நிவாரணக் கிராமங்களில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இனம் காணப்பட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் இனம் காணப்பட்ட புலி உறுப்பினர்களையும் அவர்களின் குடும்பத்தையும் பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்க அவர்களை தனிமுகாம்களில் வைத்துள்ளனர்.
யுத்தம் முடிந்தாலும் புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கில் கஞ்சிக்குடியாறு காட்டு பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை படையினர் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் புலி உறுப்பினர் சிலர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். கஞ்சிக்குடியாற்றில் இராணுவத்தினர் தேடுதல் நடத்தியபோது 11 புலிகள் கொல்லபட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
புலிகளுக்கு உதவி செய்துவந்த படையினர், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் யுத்தம் ஆரம்பிக்க காரணமான இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வை அரசு முன்வைக்கப்போகிறது என்ற கேள்வியே இன்று மக்கள்முன் நிற்கிறது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படும் என்றும் 13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பற்றுறுதியுடன் இலங்கை அரசு செயற்படும் என்றும் இந்தியாவிடம் இலங்கை தெரிவித்துள்ளது. அதேவேளை எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே அரசு அமுல்படுத்தும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி வடக்கு கிழக்கை இணைக்கமுடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
.தே.கட்சியும் இப்போது தீர்வைப்பற்றி கருத்துக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் சொல்லொணா துயரங்களை அனுபவித்த தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நியாமானதுமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியுடனும் இதர கட்சிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று .தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கா தெரிவித்துள்ளார். இதில் வேடிக்கையான விடயம் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு .தே.கட்சி ஆலோசனை கூறியிருப்பதே.
புலிகளை அழித்ததன்மூலம் தென்னிலங்கை மக்களிடம் தனது ஆளுமையை செலுத்தக்கூடியவராக ஜனாதிபதி உள்ள இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக்கொள்ள அனைத்து தமிழ் மக்களும் தீர்க்கமான பங்களிப்பை செலுத்தவேண்டும். இவ்விடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக