24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 7

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இதுவரை தடையாக இருந்தது பயங்கரவாதம் என்பது அரசின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்பட்ட பின்னர் அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் மக்களின் சார்பில் பங்குபற்றியவர்கள் புலிகளே. ஆனால் புலிகள் அரசியல் தீர்வில் நாட்டம் காட்டாது யுத்தத்திலேயே கவனம் செலுத்தினர். கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தோல்வியடைய புலிகளின் தமிழீழக் கனவே காரணமாகும்.
இப்போது பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. எனவே அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசியல் தீர்வு முயற்சிகளில் ஈடுபடும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு பலதரப்பிலும் காணப்படுகின்றன.
அரசின் சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகளும், ஜனாதிபதியின் பேச்சுக்களும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு வலுவூட்டுவதாக உள்ளன.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் அச்சமும் சந்தேகமும் இல்லாமல் வாழும் சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் அரசியல் தீர்வொன்றை நடைமுறைப் படுத்தப்போவதாக ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அரசியல் தீர்வின் முதல் கட்டமாக பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் அமைப்பில் தீருத்தம் கொண்டுவர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இப்போது பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தையே நடைமுறைப்படுத்த அரசால் சாத்தியப்படும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதை எதிர்க்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவிக்கிறது.
கடந்த காலங்களில் தமிழ் மிதவாத தலைவர்களும் சிங்கள மிதவாத தலைவர்களும் மக்களின் இன உணர்வுகளை தமது அரசியல் மூலதனமாக்கியதே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணமாகும் என்றால் அது மிகையாகாது. இதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்துள்ளனர். இனவாதம் பேசி இன்னமும் அரசியல் நடத்தலாம் என எண்ணிய ஜே.வி.பி.யை அண்மையில் நடந்த தேர்தல்களில் படு தோல்வியடையச் செய்தனர் தென்னிலங்கை மக்கள்.
அரசியல் தீர்வு முயற்சிகளில் பங்குபற்றி தமது ஆலோசனைகளை முன்வைக்கும்படி சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் வேலைத்திட்டத்திற்கு அமைய செயற்பட்டதால் அரசியல் தீர்வு முயற்சிகளில் தமது பங்களிப்பை இதுவரை செலுத்த தவறிவிட்டது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே குழப்ப நிலை காணப்படுகிறது.
அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசுடன் ஒத்துழைக்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்ததுடன் அவசரகாலச் சட்டத்தை மெலும் ஒருமாதம் நீடிக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்காமல் அரசின் வரவேற்பையும் பெற்றுள்ளார்.
இணைந்த வடக்கு கிழக்கில் அதிகார பகிர்வினுடாக தீர்வொன்றைக் காண அரசுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கிறார்.
இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவர்கள் இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதாக தெரிய வருகிறது.
இந்தியப் பிரதமர் இந்தியப் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் நிலை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.; இலங்கைத் தமிழர் நலன்குறித்து இந்தியா ஆழமானதும் தொடர்ந்து நீடித்து வருவதுமான அக்கறை கொண்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவகையில் இலங்கை அரசாங்கம் தனது மன ஆற்றலையும் துணிவையும் வெளிப்படுத்;தவேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் குழுவை புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனனை சந்தித்தபோது, இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கை முன்வைக்கவேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பாகவும் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கைமீது பிரயோகிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேசுவதை விடுத்து சர்வதேசத்துடனே பேசி தீர்வுகாண முயல்கிறது. தமிழ் மக்களின் இன்றைய அழிவிற்கும் அகதி வாழ்க்கைக்கும் முழுப்பொறுப்பையும் புலிகள்மீது சுமத்திவிட்டு தாம் தப்ப முயல்கின்றனர். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு புலிகளின் தவறான செயற்பாடுகளுக்கு பக்கத் துணையாக இருந்த காரணத்தால் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பேற்கவேண்டும். யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் தமிழ் மக்களை பயணக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த போது சர்வதேசம் மக்களை வெளியேற அனுமதிக்குமாறு புலிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த நேரத்தில்கூட மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காது புலிகளை காப்பற்றும் முயற்சியிலேயே செயற்பட்டிருந்தன.
இப்போது யாழ் மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல மட்டங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு அரசியல் தலைமை மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கவேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது நலனுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருகிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக