24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 5

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற ஈழப் போர் முடிந்துவிட்டது. புலிகள் இயக்கம் வேருடன் அழிக்கப்பட்டுவிட்டதாக அரசு தெரிவிக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை இன்னமும் தொடர்கிறது.
யுத்தம் முடிவுற்றாலும் பயங்கரவாதம் முற்றாக ஓழிந்து விட்டதா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
பிரபாகரன் உயிருடன் இல்லை என்று புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே. பத்மநாதன் அறிவித்த பின்னரும் புலி விசுவாசிகள் பலர் இன்னமும் அதை நம்ப மறுக்கின்றனர். சிலர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்ப முயற்சிக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் இல்லை என்று அறிவித்த பத்மநாதன் புலி விசுவாசிகளால் துரோகியாக்கப்பட்டுள்ளார். பிரபாகரன் இறப்புக்கு அப்பாற்பட்ட அதாவது சாகாவரம் பெற்றவராக புலிகளின் விசுவாசிகள் இதுவரை கருதியுள்ளனர் போலும்.
பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் பிரபாகரனும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டவிதம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. பிரபாகரனின் சகாக்கள் துரோகத்தனமாக கொல்லப்பட்டார்கள் என பத்மநாதன் ஒரு செய்தியில் தெரிவித்திருந்தார். இறுதி நேரத்தில் பிரபாகரனும் அவரது சகாக்களும் உள்ளுர் மற்றும் சர்வதேச இடைத்தரகர்கள்மூலம் இராணுவத்திடம் சரணடையும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை தெரியவருகிறது.
புலிகள் தாங்கள் சரணடைவதற்கு இடைத்தரகராக செயற்படுமாறு தன்னிடம் புலிகள் மன்றாடியதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார். நாங்கள் எமது ஆயுதங்களை கீழே வைக்கிறோம் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம்; என்று ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் கடைசியாக நடேசன் கூறிதாகவும் மேரி கொல்வின் தெரிவிக்கிறார். இடைத்தரகராக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவும் செயற்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் அரசியல் தலைவரும் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவனும் இறுதி நேரத்தில் தங்களுடன் இருந்த 300 பேரை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்டிருந்ததாகவும் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது 26 வருட உள்நாட்டு போரில் மிகவும் அபாயகரமான கட்டம் என்பதை இருவரும் அறிந்திருந்தனர் எனவும் லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யுத்தநிறுத்தம் கோரி இந்திய மத்திய அரசை அணுகியபோது புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதாக அறிவித்தால் மட்டும் போதும் மற்றதை நாம் பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். அப்போது புலிகளுக்கு வராத ஞானம் இறுதி நேரத்தில்தான் காலம் கடந்து ஏற்பட்டிருக்கிறது.
புலிகளுக்கு அரசியல் தீர்வு காணுவதற்கான சந்தர்ப்பங்கள் பல கிடைத்தபோதிலும் அதை சரியாகப் பயன்படுத்த தவறிவிட்டனர். அதேவேளை சர்வதேச சமூகத்திற்கு இராணுவரீதியாக சவால் விட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து இறுதியாக உயிர்களையும் இழந்துவிட்டனர்.
யுத்தம் முடிந்தாலும் சர்வதேசநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்கள் புதிய தலைமையில் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு ஒரு லட்சம் படையினரை மேலும் திரட்ட இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் அது தொடர்பாக மென்மேலும் ஆராய்ந்து பார்க்கவேண்டி உள்ளதாகவும் கொழும்பு நகரில் இருப்பதாக நம்பப்படும் தற்கொலைக் குண்டுதாரிகளை தேடிவருவதாகவும் இந்த நிலையில் அவசரகால நிலமை, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இருக்கும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புலி; உறுப்பினர்கள் 9100 பேர் சரணடைந்துள்ளதாகவும் இவர்களில் 7500 பேர் புனர்வாழ்வு நிலையம் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 1600 பேரிடம் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக விசாரித்து வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து விட்டது. இனி யுத்தம் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. எனவே இனி மனித உரிமைகள் பற்றிய குரல்கள் ஒலிக்கும். இலங்கையில் சமீpபத்திய மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை, சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து ஆராய்வதற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்துமாறு மனித உரிமைக் கவுன்சிலிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
.நா.மனித உரிமைக் கவுன்சிலிடம் இலங்கை அரசாங்கம் தீர்மான நகல் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த தீர்மான நகல் வரைவானது இலங்கை தமிழர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்திருப்பதாகவும் அந்த தீர்மானம் குறித்து பொருத்தமான முடிவினை எடுக்குமாறும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் அத்துமீறல்களை மூடிமறைத்து அதனை பாதுகாக்க முயல்வதாகவும் பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாக கருதி இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்படவேண்டும் என்று இஸ்ரேல் வைத்த யோசனை 193 நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவிக்கிறார்.
யுத்தம் முடிந்து அகதிகளாக உள்ள மக்களின் பெருமூச்சு ஆறுவதற்குள் இலங்கை அரசு வடக்கில் தேர்தல்களை நடத்த ஆரம்பித்துவிட்டது. யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைக்கான உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு யூன் 17ம் திகதி தொடக்கம் யூன் 24ம் திகதிவரை வேட்புமனு தாக்கல் செய்ய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இந்த தேர்தலை பின்போடும்படி புளொட், ,.பி; ,ஆர்,எல்,எவ்,(பத்மநாபா) ஆனந்த சங்கரி இணைந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசின் நடவடிக்கைளைப் பார்க்கும்போது இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என எதிhபார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக