24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 4

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக நேற்று பாராளுமன்ற புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை புலிகளின் தலைவர் இறக்கவில்லை எனவும் யுத்தம் தொடரும் எனவும் புலிகளின் சார்பான ஊடகங்கள் தெரிவித்து தங்களை திருப்திப்படுத்திக் கொண்டுள்ளன. இவர்களுக்கு துணையாக தமிழ்நாட்டில் சில அதிமேதாவித் தலைவர்கள் அறிக்கை விட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டம் தோல்வியடைய யார் காரணம். இனப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன.? இந்தக் கேள்விகளுக்குத்தான் விடை தேடுகிறது தமிழ் இனம்.
புலிகளின் தோல்விக்கு புலிகள் மட்டும்தான் காரணமா? மக்களுக்கு பங்கு இல்லையா என்றால் நிச்சயம் தமிழ் மக்களுக்கும் பங்குண்டு. அதாவது புலிகளின் போராட்டம் தவறான பாதைக்கு செல்ல மக்கள் அளித்த அங்கீகாரமும் விடுதலைக்கான போராட்டம் தோல்வியடைய ஒரு காரணமாக கொள்ளலாம்.
புலிகள் தமது ஆயுத பலத்தால் ஏனைய போராட்ட அமைப்புகளை அழித்தபோது அதை அங்கீகரித்த மக்களும் புலிகள் தவறான பாதைக்கு செல்ல ஒரு காரணமாகும். 83ம் ஆண்டு இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதற்கு காரணமான தென்னிலங்கை மக்களை சிங்கள காடையர் என வாய் கிழிய வர்ணித்த தமிழர்கள் தமது இனத்தவரான சகோரதர இயக்க இளைஞர்களை புலிகள் உயிருடன் கொளுத்தி படுகொலை செய்தபோது அதை நியாயப்படுத்தியும், அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும் அந்தக் கொலைகளை அங்கீகரித்து தங்களிடம் மறைந்திருக்கும் எதிர்மறையான குணாம்சங்களை வெளிப்படுத்தியிருந்தனர். அப்போதே விடுதலைப் போராட்டம் தோல்வியை நோக்கி அடிஎடுத்து வைக்கப்பட்டது. தன் இனத்தைச் சேர்ந்த மாற்று இயக்கப் போராளிகளை குறிப்பாக கிழக்கு மாகாண போராளிகளை மிலேச்சத்தனமாக புலிகள் படுகொலை செய்தபோது கண்டிக்காத தமிழ் இனம் சிங்கள மக்களை விமர்ச்சிக்கும் தகுதியை அப்போதே இழந்ததுடன் புலிகள் தப்பான போராட்ட பாதைக்கு செல்ல காரணமாயினர்.
தமிழ் அறிஞர்கள், புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என்று தமிழ் மக்கள் பலரை களை எடுப்பதாக கூறி கொலை செய்தபோது புலிகளை கண்டிக்காது அவர்களின் தவறான அணுகுமுறைக்கு அங்கீகாரம் கொடுத்தனர் தமிழ் மக்களும் புத்திஜீவிகள் என சொல்லப்பட்ட பலரும். களைகள் அழிக்கப்பட்டதால் ஈழப் போராட்டம் வெற்றி கண்டு விட்டதா? கடந்த காலத் தவறுகளை மீள்பரிசோதனை செய்யும் நிலையில்தான் உள்ளனர் தமிழ் மக்கள்.
ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைபற்றி பேசுவதற்கு இலங்கை அரசாலும் சர்வதேசத்தாலும் புலிகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இருந்தும் அவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்து அகதிகளாக்கப்பட்டதுதான் கண்ட பலன்.
புலிகள் இயக்கத்தை தவிர உலகத்தில் உள்ள அனைவரும் முட்டாள்கள், அவர்களை சுலபமாக ஏமாற்றலாம் என புலிகள் எண்ணிச் செயல்பட்டனர். ஈழத்தை நோக்கி செயற்பட்ட புலிகள் தமது போராட்டத்துக்கு அனுசரணையாக இருந்த இந்தியாவை பகைத்துக்கொண்டது மாத்திரமல்ல இந்தியப் பிரதமரை கொலைசெய்து அவர்களது ஈழப் போராட்டத்தின் தோல்விக்கான இன்னொரு அடியை எடுத்து வைத்தனர். ரஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ரஜீவ் கொலையை நியாயப்படுத்திய தமிழ் மக்கள் எப்படி மகிழ்ச்சி அடைந்தனரோ அவ்வாறே பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு தென்னிலங்கை மக்கள் தமது மகிழச்சியை வெளிப்படையாக தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் அளித்த ஆதரவையும் புறக்கணித்து வீரம் பேசிய புலிகள், முடிவில் தம்மை இலங்கை அரசிடம் இருந்து காப்பாற்றும்படி சர்வதேசத்திடம் மண்டியிடவேண்டி வந்தது. ஆனாலும் அது காலம் கடந்த முயற்சியாக தோல்வியடைந்தது.
முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாசா, சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரையும் சர்வதேசத்தையும் ஏமாற்றியது போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஏமாற்றலாம் என கனவு கண்ட புலிகள் இறுதியில் தங்களையே அழித்துக்கொண்டனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது வடக்கு கிழக்கில் 15ஆயிரம் சதுர கிலோமிற்றர் பரப்பளவை புலிகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர். புலிகள் மேலும் தமது நிலப்பரப்பை அதிகரிக்கவேண்டும் என்ற ஆலோசனைகளை புலிகள் சார்பான புத்திஜீவிகள் என சொல்லப்படுபவர்கள் சிலர் புலிச்சார்பு ஊடகங்கள் மூலம் தெரிவித்துவந்தனர். அவர்கள் புலிகளை சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தைவிட புலிகளின் ஆதரவாளர்களாக புலிகளுக்கு தம்மை இனங்காட்டுவதே முக்கிய நோக்கமாக இருந்தது எனலாம்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருந்த காலம் என்பதால்; யுத்தத்தை அரசாங்கம் முதலில் ஆரம்பிக்கவேண்டும் என்ற நோக்கில் அப்போது பல சிறிய தாக்குதல்களை புலிகள் இராணுவத்திற்கு எதிராக மேற்கொண்டிருந்தனர். இப்போது வன்னியில் இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கும் புலிகளின் ஆயுதங்களைப் பார்த்தால் அப்போது புலிகள் ஆயுதம் பலம் மிக்கவாகளாகவே இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. கடல் பலமும் மிக்கவர்களாக இருந்துள்ளனர். சிறிய விமானங்களும் வைத்திருந்தனர். எனவே ஒரு யுத்தத்தின்மூலம் தமது நிலப்பரப்பை மேலும் அதிகரிக்கலாம் என எண்ணியிருக்கலாம்.
2006 யூன் மாதம் 26ம் திகதி மாவிலாறு அணையை புலிகள் மூடினர். மாவிலர்று அணையை மூடுவதால் ஏற்படும் பிரச்சினையின் முக்கியத்துவம் புலிகளுக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்பிரச்சினையின்பால் சர்வதேசத்தின் கவனம் திரும்பியதும் புலிகள் அதன்மூலம் அரசுடன் பேரம் பேசலாம் என எண்ணினர்.
திருமலை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கும் மூதூரில் உள்ள புலிகளின் முகாம்களை அகற்ற தருணம் பார்த்திருந்த அரசாங்கம் மாவிலாறு அணையை மூடியதால் பொதுமக்களுக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி கிழக்கில் 2006 யூலை 8ம் திகதி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
2007ல் பாதுகாப்பு படையினர் கிழக்கு மாகாணம் முழுவதையும் புலிகளின் பிடியில் இருந்து மீpட்டு வடக்கில் தமது கவனத்தை திருப்பினர். 2007ல் வன்னியில் ஆரம்பித்த யுத்தம் முடிவுற்றதாக 18.05.2009 அன்று பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
யுத்தம் முடிந்துவிட்டது. இனப்பிரச்சினை முடிந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை நேற்று ஜனாதிபதியின் உரையில் காணக்கிடைக்கிறது. அவர் தமது உரையில், இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு இறுதித்தீர்வாக அமையாது. அரசியல் தீர்வே இறுதித்தீர்வாக அமையும். மிக விரைவில் அரசியல் தீர்வு வைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா, நோர்வே, அமெரிக்கா முதலிய நாடுகள் உடனடியாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டும் என வலியுறுத்த தொடங்கிவிட்டன. இனப்பிரச்சினைக்கான தீர்வை துரிதப்படுத்த சர்வதேச நாடுகளின் பங்கும் அவசியம். சர்வதேச நாடுகளின் பங்கை அதிகப்;படுத்துவதற்கு சர்வதேச நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் பாரிய பங்குண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக