21 ஏப்ரல், 2010

பொன்சேகாவுக்கு எதிரான 2வது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை மே 4க்கு ஒத்திவைப்பு



முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ள்ளது.

‘இரு தரப்பினரும் தமது வாதங்களை எழுத்து மூலம் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நேற்று கூடிய இராணுவ நீதிமன்றம் கோரியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நேற்றைய தினமும் கூடிய 2வது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது.

காலை 11.00 மணியளவில் கூடிய இந்த நீதிமன்றத்தின் அமர்வு பிற்பகல், 1.30 மணிவரை நடைபெற்றுள்ளது.

இரண்டு இராணுவ நீதிமன்றத்தின் நீதவான் அட்வகேட்டாக செயற்படும் ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவிடம் இரு தரப்பினரினதும் எழுத்து மூல வாதங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு அடுத்த நீதிமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே நேற்றைய தினமும் இந்த இராணுவ நீதிமன்றம் கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக