21 ஏப்ரல், 2010

அமைச்சரவையை நியமித்த பின் ஜனாதிபதி பூட்டானுக்கு விஜயம்


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார்.

ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பூட்டானில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற 16 ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காவே ஜனாதிபதி அங்கு செல்லவிருக்கின்றார். சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சார்க் உச்சி மாநாடு ஏப்ரல் 28, 29 ஆம் திகதிகளில் பூட்டான் தலைநகரான திம்புவில் நடைபெறும்.

2008 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்புக்களை பூட்டான் பிரதமரிடம் இந்த மாநாட்டின்போது ஒப்படைப்பார். 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் நாட்டு தலைவர்களுடன் பூட்டானில் வைத்து முக்கிய சந்திப்பில் ஈடுபடுவார் என்றும் முக்கியமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விசேடமாக கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக