27 ஜூன், 2010

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்





அவுஸ்திரேலியா, சிட்னியிலுள்ள மனித உரி மைச் செயற்பாட்டாளர்கள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு, அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை புதிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் செனட் உறுப்பினர் சாரா ஹன்சன் யங் மற்றும் எழுத்தாளர் டொம் கெனெலி ஆகியோர் இணைந்து கொண்டனர். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகள், மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட அகதிகள் நடவடிக்கை குழுமத்தின் பேச்சாளர் இயன் ரின்டோல், புதிய பிரதமர் ஜுலியா அகதிகள் தொடர்பில் மாற்று கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கெவின் ரூட், அகதிகள் தொடர்பில் முன்னெடுத்த கொள்கையின் கடினத்தன்மை காரணமாகவே, தொழில் கட்சியின் புகழ் பின்னடைந்தது.இந்த நிலையில், தொழில்கட்சியின் புகழை மீண்டும் கட்டியெழுப்ப, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு புகலிட உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக