9 டிசம்பர், 2010

போர்க்குற்றம் தொடர்பாக கரு ஜயசூரியவின் பேட்டி சபையில் சர்ச்சை; கூச்சல் குழப்பம்: சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு






போர்க்குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.தே.க எம்.பி. கரு ஜயசூரிய ஆங்கில பத்திரிகையொன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்றும் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

கரு ஜயசூரிய எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பற்றி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விசேட விளக்கமொன்றை சபா நாயகரின் அனுமதியுடன் சபையில் தெரிவித்தார். இந்த விளக்கத்தின்போது தனது பெயர் குறிப்பிடப்பட்டதால் தானும் விளக்கமளிக்க வேண்டியவனாக இருக்கின்றேன் எனக் கூறி சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.

இச்சமயத்திற் கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயலத் ஜயவர்தன எம்.பி. மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் முயற்சியின் அடிப்படையிலேயே கரு ஜயசூரிய எம்.பி. இக்கருத்தை வெளியிட்டுள்ளார் எனக் கூறியதுடன் அரசின் மீது அவதூறுகளை சுமத்தினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர். கூச்சலுக்கு மத்தியில் கரு ஜயசூரிய எம்.பி.யும் தனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரியபடி எழுந்து நின்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

உறுப்பினர்களை ஆசனங்களில் அமருமா றும், அமைதியாக இருக்குமாறும் பலமுறை சபாநாயகர் அறிவுறுத்தல் வழங்கினார். சபையில் தொடர்ந்தும் குழப்பநிலை ஏற்பட்டதால் சபையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். காலை 10.35 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் காலை 10.55 க்கு ஆரம்பமானது. கரு ஜயசூரிய எம்.பி. தனது விளக்கத்தை அளிப்பதற்காக எழுந்து நின்றார். அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் எழுந்து நின்று கூச்சலிட்டவாறே இருந்தார்.

மிக முக்கியமான விடயங்கள் இன்றைய விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் பலமுறை மேர்வின் சில்வாவை அமைதியாக இருக்குமாறு பணித்தார். அவர் தொடர்ந்தும் எழுந்து நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் அமரவில்லையா நான் இன்று முழு நாளும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டுச் சென்று விடுவேன் என சபாநாயகர் கூறினார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் மேர்வின் சில்வாவை அமரச் செய்தனர். இதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. கரு ஜயசூரிய தனது விளக்கத்தை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக