9 டிசம்பர், 2010

புலம் பெயர்ந்தோரை பலிக்கடாவாக்குகிறது பிரிட்டிடி; அரசு






பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்க ளென்பது, ஜனாதிபதிக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் புலனாகுவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டிருந்தால், ஜனாதிபதி உரையாற்றித் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்க முடியுமென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி சேவையின் நடப்பு விவகாரப் பிரிவினரால் தயாரித்து வழங்கப்படும் ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்து ள்ளார். அவர் மேலும் கூறு கையில்,

‘ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல. 40% -50% அரசு மானியத்தில் இயங்குகிறது. எனவே, ஆர்ப்பாட்டம், நடந்துவிட்டது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறிச் சமாளிக்க முடியாது. இது தாக்கத்தை மட்டுமல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

ஏகாதிபத்திய அரசுகள் காலா காலமாக எவ்வாறு பிரச்சினைகளை உருவாக்கினார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆகவே, ஆளுங்கட்சி எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பார்க்கவேண்டும்.

மேற்கத்திய சமூகம் தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் இந்தத் தருணத்தில், ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். வன்முறைகளில் மீண்டும் ஈடுபட முடியாது. மேற்கத்தைய சமூகம் தமிழ் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் சென்றபோது புலம்பெயர் சமூகத்தினரைச் சந்திக்கச் செய்திருக்கலாம். ஜனாதிபதி வெளிப்படையான மனதுடன் செயற்படுபவர். பிரிட்டிஷ் அரசின் அனுமதி இல்லாமல் வன்முறையில் ஈடுபட முடியாது. இதனை அரசு நினைத்தால் தடுத்திருக்கலாம்.

நாட்டின் தலைவர் வரும்போது அவமதிப்பதை ஏற்க முடியாது. வெளிநாட்டிலிருந்து எவராது பிரமுகர், அமைச்சர் வந்தால், அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்று விருந்தளிப்பவர் ஜனாதிபதி. அப்படியான ஒருவர் வந்தபோது பிரிட்டிஷ் அரசு பொறுப்பேற்றிருக்க வேண்டும். இலங்கை வாழ் மக்கள் இனியாவது ஒன்றுபட்டுச் செயற்படுவார்களென்று வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை வாழ் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகப் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுகிறார்கள் என்று கூறுவே முடியாது.

தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவாகி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்கள். அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவோ வேறு யாராகவோ இருக்கலாம். அவர்களுக்குத் தான் அந்தக் கடப்பாடு உண்டு. புலம்பெயர்ந்த சிலர் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். நாடு கடந்த அரசு, பிரதமர் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதனால், பாதிப்பும் தாக்கமும் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தான்.

இலங்கை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் தங்கியிருக்க வேண்டுமென அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. எனினும், இலங்கை தனித்துவமான தந்திரோபாய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கின்றது. இலங்கை பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், புலம்பெயர்ந்தவர்களை மேற்குலகம் தூண்டிவிடுகின்றது.

தேர்தல் நலனுக்காக எமது மக்களைத் திசை திருப்புவதற்கு அனுதாபப்படுகிறார்கள். போர்க்குற்றம் வீடியோ எனக் காண்பித்து மக்களைத் தூண்டி விடுகிறார்கள். பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டிய தேவை கிடையாது. இராஜதந்திர நட்பு ரீதியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

இங்குள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சரியான தகவல்களை பிரிட்டனுக்கு வழங்கவில்லை. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென 68% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பாரபட்சமற்ற அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. இதனை பிரிட்டிஷ் தூதுவர் எடுத்துக் கூறவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது சாதகமான மாற்றமொன்றை அறிவித்திருக்கிறது. இவ்வாறான தமிழ் அரசியல் கட்சிகளின் மாற்றத்தை புலம்பெயர் தமிழர்கள் பின்பற்றவேண்டும்.

எதிர்க் கட்சி தவறான பிரசாரத்தை வெளிநாடுகளில் மேற்கொள்ளக்கூடாது. இதற்குத் தமிழ் மக்கள் ஆளாகிவிடக்கூடாது. ஐ.தே. கட்சி தமிழ் மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பாராளுமன்ற விவாதங்களில் உரையாற்றுகிறது. தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதைப்போல் காட்டிக்கொள்கிறது.

ற்போதைய வளர்ச்சியில் தமிழ் மக்களும் பங்காளர்களாக மாறவேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்து அனுப்புகள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக