9 டிசம்பர், 2010

2,500 மெ. தொ. கோழி இறைச்சி, 50 மில். முட்டைகள் உடன் இறக்குமதி





பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதத்தில் 2500 மெற்றிக் தொன் கோழி இறைச்சியும் 50 மில்லியன் முட்டைகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என கூட்டுறவு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாகவோ குறைவாகவோ விற்கப்படமாட்டாது. சந்தையில் கோழி இறைச்சியின் கட்டுப்பாட்டு விலையாக 350 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்ற த்தில் கேட்ட வாய் மொழி மூல விடை க்கான கேள்வியொன் றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித் தார்.

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான கோழி இறைச்சியை சந்தையில் 350 ரூபாவுக்கு விற்கப்படும். பண்டிகை காலத்தில் இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு 11,000 மெற்றிக் தொன் கோழி இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 8750 மெற்றிக் தொன் இறைச்சி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. பண்டிகை காலமொன்று வரும்போது இவ்வாறு விலை அதிகரிப்பது இயற்கையே. எனினும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படாத விதத்தில் கட்டுப்பாட்டு விலையை விட குறைவாக விற்பதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்ற சொசேஜஸ் வகைகளுக்கான கோழி இறைச்சியும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சோசேஜஸ் வகைக்காக மனித பாவனைக்கு உகந்ததென அங்கீகரிக்கப்பட்ட கோழி உள்ளுறுப்புகள் இறக்குமதி செய்யப் படுகின்றன.

இவை கோழி இறைச்சி என்றே குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், சீனா,ஜேர்மன் போன்ற நாடுகளிலிருந்து சொசேஜஸ் உற்பத்தி நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்கின்றன. 2006 ஆம் ஆண்டு 3,90,322 கிலோ இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. இதனைத் தொடர்ந்து கேள்வி நேரம் ஆரம்பமானபோதே தயாசிறி ஜயசேகர இக்கேள்வியை கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக