தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் மீது வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்த காரணம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே என மட்டக்களப்பில் நேற்று (09) நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே. குருநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கற்றிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் அமர்வு இடம்பெற்றது.
இதில் ஆணைக்குழு உறுப்பினர்களான எம்.பி. பரணகம, ஹந்தவத்தை, ரொகான் பெரேரா, பளியக்கார, மனோகரி இராமநாதன், சி. சண்முகம் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இவ் அமர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண் டிருந்தார்.
இங்கு மட்டக்களப்பு சமாதான அமைப்பின் தலைவர் அருட் தந்தை மில்லர் முதலில் தனது சாட்சியத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுவின் தலைவர் குருநாதன் காணி விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட விதம் தமிழ் மக்களைப் பாதித்தது. தமிழர்களைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு காணிகளை அபகரித்தது. சமாதானம் சீர்குலைந்ததற்கு அடிப்படைக் காரணம் காணி விடயமேயாகும்.
தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் மீது நம்பிக்கையீனம் ஏற்படவும் யுத்தம் ஏற்படவும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்த மோசடி செயலும் திட்டமிட்ட நில அபகரிப்புமே காரணம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஜனாதிபதி இவ் ஆணைக்குழுவை நியமித்தமைக்கு நான் நன்றி கூறுகின்றேன் என்றார்.
இவ் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் செல்வேந்திரன் உட்பட பொதுமக்கள் பலரும் சாட்சியமளித்தனர்.
கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினர் காத்தான்குடிக்கும் விஜயம் செய்தனர்.
ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா நேற்று சமுகமளிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இளந்திரையன், புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளர் பிரபா ஆகியோரின் மனைவிமாரும் சாட்சியமளித்தனர்.
வண. பிதா மில்லர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஜி. காசிநாதன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த அ. செல்வேந்திரன் மட்டக்களப்பு அபிவிருத்தி சபையின் சார்பில் ஓய்வுபெற்ற காணி ஆணையாளர் க. குருநாதர் உட்பட காணாமல் போனோரின் மனைவிமார் பலரும் சாட்சியமளித்தனர்.
சுமார் 800 பேர் சாட்சியம் அளிக்க சமுகமளித்திருந்தனர். மாநாட்டு மண்டபம் நிரம்பி வழிந்தது.
பெண்களே அதிகூடிய அளவில் காணப்பட்டனர். காணாமல் போனவர்களின் மனைவி மார்களே பெரும்பான்மையினராகையால் அவர்களிடமிருந்து ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டன.
ஒரு சிலரின் சாட்சியங்களே பதிவு செய்யப்பட்டன.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக