மேல் மாகாணத்தில் பாடசாலைகளை அண்மித்த பிரதேசங்களில் வெவ்வேறு விதமான போதைப் பொருட்களின் விற்பனையும், அவற்றைப் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்திருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தவென விசேட வேலைத் திட்டமொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நேற்று பணிப்புரை விடுத்தார்.
மேல் மாகாண அபிவிருத்தி முன்னேற்ற ஆய்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாணந்துறை சிறி சுமங்கல வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முத லமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதித் தலை வர்கள், பொலிஸ் மாஅதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் என சகல தரப்பினரும் பங்குபற்றினர்.
மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானாவின் வரவேற்புரையோடு இக்கூட்டம் ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறுகையில், நாட்டின் பல மாவட்டங்களில் மதுப்பாவனை அதிகரித்திருக்கையில் கொழும்பு மாவட்டத்தில் இப்பாவனை குறைவடைந்திருப்பதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என்றாலும் சட்ட விரோத மதுப்பாவனை அதிகரித்திருக்கலாமென நம்புகிறேன்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் வெவ்வேறு விதமான போதைப் பொருள் விற்பனை இடம்பெறுகின்றது. இந்நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்குப் பழக்கப்படுகின்றார்கள்.
போதைப் பொருள் பாவனையின் விளைவுகள் குறித்து ஆசிரியர்களும், மதத் தலைவர்களும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேநேரம் பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனையையும், அவற்றை மாணவர்கள் பாவிப்பதையும் கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத் திட்டமொன்றை உடனடியாக செயற்படுத்த அரசியல் தலைவர்களையும், பொலிஸாரையும், அதிபர்களையும் மதத் தலைவர்களையும் உள்ளடக்கி இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் கூறினார்.
இதேநேரம் விசேட வரிச் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு முதலீட்டு வலையங்களில் செயற்படுகின்ற வேலைத் திட்டங்களில் எந்த மேம்பாட்டையுமே அடையாது தோல்வியுற்றிருக்கும் வேலைத் திட்டங்களை துரிதமாக அரசாங்கம் பொறுப்பெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுநலவாய நாடுகளின் 2018ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி இலங்கையில் நடைபெறவிருக்கின்றது. இப்போட்டியில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு பதக்கங்களை அதிகளவில் வென்றெடுப்பதற்கு ஏற்றவகையில் நாம் தயாராக வேண்டும். தனியே விளையாட்டு மைதானங்களையும் கட்டங்களையும் நிர்மாணிப்பதால் மாத்திரம் இதனை அடைந்து கொள்ள முடியாது.
அபிவிருத்தி என்ற போர்வையில் நிர்மாணிக்கப்படும் சட்ட விரோத கட்டங்களை நிறுத்திவிடுவதற்குரிய வேலைத் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும். இவ்விடயத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொதுமக்களும் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஏ. எச். எம். பெளஸி, விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த், அனுர பிரியதர்ஷன யாப்பா, குமார வெல்கம, பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், பிரபா கணேஷன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக