10 அக்டோபர், 2010

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு மன்னிப்பு கிடையாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


வாஷிங்டன், அக். 8: பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நாடுகளுக்கு மன்னிப்பே கிடையாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் இது குறித்து வாஷிங்டனில் மேலும் கூறியது:

÷பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதி பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. அங்கு தலிபான்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பாகிஸ்தானின் இந்த செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

÷இது தொடர்பாக அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் பலவகைகளில் செயல்படாமல் உள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

÷பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க கூட்டுப்படை, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். தவறாக நடந்து விட்ட இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

÷பாகிஸ்தானுடன் உறவு சுமுகமாக இருக்க வேண்டுமென்றே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இதற்காக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் வேகம்காட்ட வேண்டும் என்றார் அவர்.

பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ உதவி -பென்டகன்: இதனிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவிட் லாபன் கூறியுள்ளது:

÷ஐஎஸ்ஐ அமைப்பின் சில அதிகாரிகளுக்கும் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் சில பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ அதிகாரிகள் பல வகையில் உதவிகளைச் செய்துள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்றார் அவர்.

÷ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படை பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அங்கு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

÷இதுதவிர இப்போது முதல்முறையாக பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பதை அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. எனவே பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தலாம் என்றும், பாகிஸ்தான் மீது வேறு முறைகளில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக