10 அக்டோபர், 2010

கடவுச்சீட்டை தொலைத்த இந்திய பெண் உயிரிழப்பு


கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு ஒமானியத் தலைநகர் மஸ்கட்டின் விமான நிலையத்தில் ஐந்து நாட்களாக சிக்கித்தவித்திருந்த ஒமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்துவந்த இந்தியப் பெண்ணொருவர் விமான நிலையத்திலே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நாற்பது வயதுடைய பீபி லுமாடா என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் பெண் மஸ்கட்டிலிருந்து கிளம்பி இந்தியா திரும்பும் வழியில் தோஹாவில் தனது கடவுச்சீட்டைத் தொலைத்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர்.

கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்திற்கு வெளியில் விட மஸ்கட் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.

இவரது நிலை குறித்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையம் வந்து இந்தப் பெண்ணைச் சந்தித்து அவருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இந்திய தூதரக அதிகாரிகள் உறுதியளித்திருந்தார்கள் என்றும் ஆனால் விமான நிலையத்திலுள்ள காவலர்கள் தொடர்புகொண்டும் இந்திய அதிகாரிகள் ஐந்து நாட்களாக அந்தப் பெண்ணை வந்துச் சந்தித்து உதவவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ஃப் நியூஸ் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

பீபி லுமாடா வேலை செய்துவந்த வீட்டின் உரிமையாளரையும் தொடர்புகொள்ள முயன்றும் அது பலனளிக்காமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கட் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் மாறுவதற்கான வளாகத்தில் விடுதிகள் எதுவும் இல்லை. ஆதலால் அந்தப் பெண்மணி வெளியிலேயே தங்கியிருந்துள்ளார். கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தார் அவருக்கு உணவும், போர்வையும் கொடுத்து உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச் சீட்டு தொலைந்துபோன அதிர்ச்சியிலும் உதவி கிடைக்காத வருத்ததிலும் அவர் மனதை விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன உளைச்சல் காரணமாக இந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என ஒமானிய அரசாங்க மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ஒமானுக்கான இந்தியத் தூதர் அனில் வாத்வா தெரிவித்துள்ளார்.

நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த இந்தப் பெண்ணுக்கு உதவிகள் கிடைப்பதை தாமதப்படுத்தியுள்ளது கவலை தருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்லார்.

தற்சமயம் பீபி லுமாடாவின் உடலை இந்தியாவின் அவர் தம் உறவினர்களுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மஸ்கட் இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக