10 அக்டோபர், 2010

இலங்கை அகதிகள் குறித்து சோனியாவுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் தமிழர்களை விடுவித்து, அவர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பவும் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும் இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதி சோனியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா நேற்று மதியம் 2.05 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். உடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார்.

சென்னை வந்த சோனியாவை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்த ஒரு கடிதத்தை முதல்வர் கருணாநிதி சோனியாவிடம் கொடுத்தார்.

"கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்றார். பின் அங்குள்ள நிலவரம் குறித்து தமிழக தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இன்னமும் 30 ஆயிரம் தமிழர்கள் இலங்கை முகாம்களில் துயரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இலங்கை முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இருப்பினும் இந்திய வெளியுறவுத் துறை செயலரே 30 ஆயிரம் பேர் அடைபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் முகாம்களில் துயரங்களை அனுபவித்து வரும் தமிழர்கள் விரைவில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும், அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவற்றை விரைவாகச் செய்யும்படி இலங்கை அரசைஇ மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்" என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக