23 செப்டம்பர், 2010

யுத்தத்தின் பாதிப்பு காரணமாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை நோர்வே பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு




வடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது சமாதான சூழல் நிலவுவதாகவும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் துரிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ள நோர்வே அமைச்சர் எரிக்சோல்ஹெய்ம், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்ல நோக்கத்துடன் பார்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் தமது நிலைப்பாட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்காமல் பாராளுமன்றத்திற்கூடாக ஜனநாயக ரீதியில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின் போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அதேவேளை நோர்வே அரசாங்கம் நோரூட் நிறுவனத்தினூடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் அமைதிச் சூழல் நிலவுவதுடன், நாட்டின் நெடுஞ்சாலைகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோர்வே வர்த்தக சமூகத்தினர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா, சஜித் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக