23 செப்டம்பர், 2010

நிவித்திகலை சம்பவத்தின் பின்னணியில் தமிழ்த் தலைமைகளின் பொறுப்புக்கள்

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை நகருக்கு அருகிலுள்ள குக்குலகல தோட்டம் இன்னமும் வெறிச்சோடியே கிடக்கிறது. பள்ளிப்பருவத்தில் பட்டாம்பூச்சிகளாய் துள்ளித்திரிந்த சிறுவர்களை அங்கு காணவில்லை. பறிப்பார் யாருமின்றி ஈரங்குலத்துக்கும் மேல் வளர்ந்திருக்கின்றன தேயிலைக் கொழுந்துகள்.

ஆம்! இத்தோட்டத்தில் கடந்த 11ஆம் திகதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களால் அத்தோட்டமே அதிர்ந்துபோனது.

யாரோ செய்த தவறுக்காக, அப்பகுதி தமிழ் மக்கள் அனைவருமே தண்டனை அனுபவிக்கும் நிலை உருவானது.

நள்ளிரவு வேளை, தமிழர் குடியிருப்புகளுக்குள் புகுந்த காடையர்கள் வீடுகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்தனர். கால்நடைகளைக் கொன்று குவித்தனர்.

கண்போலக் காத்த வீடுகளும் பொருட்களும் கண்மூடித்தனமாக உடைக்கப்பட்டபோது, கண்ணீர்விட்டழுத மக்கள் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

பிஞ்சுக் குழந்தைகளைக் கையிலேந்தி உண்டுறங்க எதுவுமின்றி அவர்கள் பட்ட துன்பங்களோ ஏராளம்.

தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் என்று பல தரப்பினரும் வெவ்வேறு விதங்களில் கருத்துக் கூறி வந்தார்கள்.

ஆனால் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் 'மது பாவனை' தான் என்பது புலனாகும்.

கசிப்பு விற்பனையால் வந்த விளைவு

நிவித்திகலையிலும் தேலை(தாலை என தமிழில் அழைக்கப்படுகிறது), குக்குலகலை மற்றும் நொரகல்லை ஆகிய தோட்டப் பகுதிகளில் தமிழர்களே கசிப்பு எனும் மதுசார விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

உலக வளர்ச்சிப் போக்கையறியாமல் ஒரு வட்டத்துக்குள் நின்றுகொண்டு மது மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கும் பலரை நாம் அங்கு காணக் கூடியதாக இருந்தது.

இந்தக் கசிப்பு விற்பனைதான் இந்தளவு பாரதூரமான விளைவுகளுக்கும் காரணம் எனச் சொல்வதிலும் தவறில்லை. மது எனும் விஷப் பானத்தை அருந்திவிட்டு அரக்கர்களாய் மாறும் சிலர் செய்த வஞ்சக விளைவுகளால் வந்த பிரதிபலனே இது.

இதனால் அந்தத் தோட்டத்திலுள்ள 75 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமானோர் பாதிப்படையும் நிலை உருவானது.

இளம்வயதில் கல்வி கற்க வேண்டிய மாணவர்கள் இன்னும் பாடசாலைக்குச் சமூகம் தரவில்லை. நாட்சம்பளம் பெற்று அன்றாட வாழ்க்கையை அரைவயிறு, கால்வயிறு என நிரப்பி, எத்தனையோ சுமைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தோட்ட மக்கள் இன்னமும் தொழிலுக்குத் திரும்பவில்லை.

இதற்கு யார் காரணம்?

கசிப்பு விற்பனைப் பிரச்சினையால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையின் பிரதான சந்தேக நபரான தமிழர் ஒருவர் நேற்றுமுன்தினம் பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளார்.

ஒருசிலர் சுயநலனுக்காக செய்த தவறைச் சரி எனச் சொல்லிவிட முடியாது. மறுபுறம் பார்க்கையில் இவர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தமிழர்களையும் அடக்கி ஒடுக்க முற்படுவது என்பது வேதனைக்குரியதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

இதற்கு முறையானதொரு தீர்வு எட்டப்பட வேண்டியது அவசியமாகும். தமிழ்த் தலைமைகள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும்.

அவிசாவளை பம்பேகம தோட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் 85 குடும்பங்களைச் சேர்ந்தோர் பெரும்பான்மை இனத்தவரின் தாக்குதலினால் 3 நாட்கள் பட்டினியுடன் காட்டுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களின் சொத்துக்கள் அனைத்துமே சூறையாடப்பட்டன.

தொடர்ந்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்

இப்போதும்கூட, இவைபோன்ற சிலசில அசம்பாவிதங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இறக்குவானை, பொத்துப்பிட்டியவில் வசிக்கும் தமிழ் மக்கள் இன்னமும் பெரும்பான்மை இனத்தவர்களின் கூலித்தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

காவத்தை, எந்தானை தோட்டம் மற்றும் தலுக்கலை தோட்டப்பகுதியில் மாலை 6.00மணிக்குப் பிறகு வீதிகளில் நடமாடும் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகிறார்கள்.

வற்புறுத்தலின்பேரில் பகிரங்கமாகத் தமிழ்பேச முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் சூரியகந்தை தோட்டப் பகுதிகளிலுள்ள மக்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் தாய்மொழியையே மறந்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

இவ்வாறான சம்பவங்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்கள் எனக் கேட்கிறது ஒரு தரப்பு.

தலைமைகளே ஒற்றுமையின்றி இருக்கும்போது, மக்களின் ஒற்றுமை அதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து, யார், எங்கே பேசப்போகிறார்கள்? செயற்படப்போகிறார்கள் என்கிறது மற்றுமொரு தரப்பு.

எது எவ்வாறாயினும், இனம் என்ற காரணத்தைச் சொல்லி எந்த ஓர் இனமும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை தலைமைகள் சுட்டிக்காட்டித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக